நிர்மலா தேவி போல் தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியீடு கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க பெண் பிரமுகர் புகார்


நிர்மலா தேவி போல் தவறாக சித்தரித்து புகைப்படம் வெளியீடு கமிஷனர் அலுவலகத்தில் பா.ஜ.க பெண் பிரமுகர் புகார்
x
தினத்தந்தி 19 April 2018 3:53 AM IST (Updated: 19 April 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

சென்னை கோட்டூரைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி முரளிதரன். பா.ஜ.க. மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். #BJp

சென்னை, 

சென்னை கோட்டூரைச் சேர்ந்தவர் ஜெஸ்ஸி முரளிதரன். பா.ஜ.க. மகளிர் அணி மாநில செயற்குழு உறுப்பினராக உள்ளார். இவர் நேற்று பா.ஜ.க. மகளிர் அணி பிரமுகர்களோடு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

கல்லூரி மாணவிகளை தவறான விஷயங்களுக்கு அழைத்ததாக அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். நிர்மலா தேவியை போல என்னை சித்தரித்து எனது புகைப்படத்தை சிலர் சமூக வலைத்தளங்களில் தவறாக வெளியிட்டு அவதூறை பரப்பினார்கள். வேண்டுமென்றே என்னை கொச்சைப்படுத்தி பாரதீய ஜனதா தலைவர்களோடு நான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நான் தான் நிர்மலா தேவி என்று தவறாக சித்தரித்து படத்தை வெளியிட்டுள்ளனர்.

தமிழக கவர்னரையும் இணைத்து அவரது மாண்பை கெடுக்கும் வகையில், சமூக வலைத்தலங்களில் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார்கள். இதுபோல் தவறாக சமூகவிரோத விஷமிகள் அவர்களது ஆதாயத்திற்காக அப்பாவி பெண்ணான எனது படத்தை வெளியிட்டு, எனக்கு தீராத மன உளைச்சலை ஏற்படுத்திவிட்டனர். பா.ஜ.க. கட்சி மீதும் அவதூறுகளை பரப்பியிருக்கிறார்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபட்ட விஷமிகள் யார் என்பதை கண்டுபிடித்து, அவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக பா.ஜ.க. சார்பிலும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனியாக புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story