மகன், மகளை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை மனைவிக்கு அரிவாள் வெட்டு


மகன், மகளை கொன்று விட்டு தொழிலாளி தற்கொலை மனைவிக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 23 April 2018 3:00 AM IST (Updated: 23 April 2018 12:57 AM IST)
t-max-icont-min-icon

சிவகாசி அருகே மகன், மகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார்.

சிவகாசி, 

சிவகாசி அருகே மகன், மகளை கொன்றுவிட்டு தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். அவரால் அரிவாளால் வெட்டப்பட்ட மனைவி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள சல்வார்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி (வயது 42). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி முனீஸ்வரி (38). இவர்களுடைய மகள் முத்துலட்சுமி (9). மகன் முனீஸ்வரன். அந்தோணி வீட்டுச்செலவுக்கு பணம் கொடுக்காமல் இருந்து வந்ததால் கணவன் -மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவும் இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அனைவரும் வீட்டில் படுத்து தூங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் எழுந்த அந்தோணி, தூங்கிக்கொண்டிருந்த மகள் மற்றும் மகனை கத்தியால் ஆட்டை அறுப்பதைப்போல கழுத்தை அறுத்து கொலை செய்தார்.

சத்தம் கேட்டு கண்விழித்த மனைவி முனீஸ்வரியையும் அரிவாளால் வெட்டினார். உயிர்பிழைக்க அவர் வெளியே ஓடியபோதிலும் அந்தோணி அவரை விடாமல் துரத்தி வெட்டியுள்ளார். இதில் முனீஸ்வரி ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.

மனைவியும் இறந்து விட்டதாக கருதி அந்தோணி அங்கிருந்து ஓடி விட்டார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் முனீஸ்வரியை மீட்டு மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்ததும் வெம்பக்கோட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

அப்போது சேதுராமலிங்காபுரம் பகுதியில் பட்டாசு ஆலை அருகே முட்புதருக்குள் அந்தோணி பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். ஊர் மக்களும் திரண்டனர்.

அருகில் வந்தால் கொன்று விடுவேன் என்று அந்தோணி அவர்களிடம் கத்தியைக்காட்டி மிரட்டினார். அவரை கைது செய்ய போலீசார் முயன்றபோது அவர் கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அந்தோணி சில நாட்களுக்கு முன்பு மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததும், அதன்பின்பு குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்ததும் தெரியவந்தது.

Next Story