ராயபுரம் அரசினர் குழந்தைகள் வளாகத்தில் புதிய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


ராயபுரம் அரசினர் குழந்தைகள் வளாகத்தில் புதிய கட்டிடங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 2 Nov 2018 12:00 AM GMT (Updated: 1 Nov 2018 11:09 PM GMT)

சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை, ராயபுரத்தில் செயல்பட்டு வரும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில், தற்காலிக இல்லப் பராமரிப்பு தேவைப்படும் சிறுவர்களுக்காக வரவேற்பு இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த சிறுவர்கள் மட்டுமின்றி, வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள், பள்ளிக்குச் செல்லாமல் கடற்கரை, ரெயில் நிலையம், பேருந்து நிலையம் போன்ற இடங்களில் சுற்றித் திரியும் சிறுவர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்படும் சிறுவர்கள் போன்றவர்கள் தங்க வைக்கப்படுகின்றனர்.

இங்கு சிறுவர்களுக்கு தேவையான உணவு, உடை மற்றும் இதர அடிப்படை தேவைகள் வழங்கப்படுவதுடன், வள மைய ஊழியர்கள் மூலம் மனநல ஆலோசனைகளும், முறைசாராக் கல்வி, தொழிற் கல்வி சார்ந்த பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன.

2016-2017-ம் ஆண்டு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை மானியக் கோரிக்கையில், சென்னை, ராயபுரத்தில் செயல்படும் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளுக்கான வரவேற்பு இல்லக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் உள்ளதால், புதிய கட்டிடம் கட்டப்படும் என்று மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, ராயபுரத்தில் உள்ள அரசினர் குழந்தைகள் இல்ல வளாகத்தில் ரூ.1 கோடி மதிப்பீட்டில், தூங்கும் அறைகள், கழிவறைகள், குளியலறைகள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் புனரமைத்து கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

முதல்-அமைச்சர் கடந்த ஜூன் 13-ந்தேதி நடந்த சட்டசபை கூட்டத்தின்போது, சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மதுரையில், மாநகராட்சி கட்டிடத்தில் இயங்கி வரும் அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகக் கட்டிடம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளதால், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும், தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடம் கட்டப்படும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, மதுரையில் உள்ள அன்னை சத்தியா அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் மற்றும் தர்மபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளியில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3 கோடியே 65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய கட்டிடம் ஆகியவற்றிற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

இந்தநிகழ்ச்சியில், அமைச்சர்கள் டாக்டர் வி.சரோஜா, ஆர்.பி.உதயகுமார் மற்றும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.மணிவாசன், சமூக பாதுகாப்புத் துறை ஆணையர் ஆர்.லால்வேனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story