திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா-கே.பாக்யராஜ் விளக்கம்


திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா-கே.பாக்யராஜ்  விளக்கம்
x
தினத்தந்தி 2 Nov 2018 9:03 AM GMT (Updated: 2 Nov 2018 9:03 AM GMT)

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா என இயக்குனர் கே.பாக்யராஜ் விளக்கம் அளித்து உள்ளார்.

சென்னை

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவராக கடந்த மார்ச் மாதம் இயக்குனர்  கே.பாக்யராஜ்  போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். 

இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்கார்’. சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. 

‘செங்கோல்’ மற்றும் ‘சர்கார்’ ஆகிய இரண்டு கதைகளுமே ஒன்று தான் என்று தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜ் கூறினார். முழுமையாக திரைக்கதையை படிக்காமல், படமும் பார்க்காமல் எப்படி சொல்லலாம் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பதிலடி கொடுத்தார். இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்றது. பின்னர் இந்த வழக்கில் சமரசம் ஏற்பட்டது.  

இந்த நிலையில் திரைப்பட எழுத்தாளர் சங்கத்தலைவராக  இருந்த இயக்குனர் பாக்கியராஜ்  அந்த பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இது குறித்து அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய பணிவான வணக்கம்.

போட்டி இல்லாமல் அனைத்து உறுப்பினர்களின் ஏகோபித்த ஒப்புதலுடன் என்னை நம்ம சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுத்தீர்கள். நானும் சந்தோஷமாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு மனசாட்சியுடன் நேர்மையாகச் செயல்படுவதாக உறுதிமொழி ஏற்றுக்கொண்டேன். எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருந்தது.

திடீரென்று 'சர்கார்' படம் சம்பந்தமாக சங்கத்துக்கு ஒரு புகார் வந்தது. அந்தப் புகாரை பரிசீலித்து சம்பந்தப்பட்ட உறுப்பினரிடம் உண்மை இருப்பதாகத் தெரிந்ததால், அவருக்கு நியாயம் வழங்க, பொறுப்பில் இருக்கும் முக்கியமானவர்கள் அனைவரையும் கலந்து ஆலோசிக்க நடவடிக்கை எடுத்து, நல்லபடியாக, நியாயமாக அதைச் செயல்படுத்தவும் முடிந்தது.

ஆனால், அதில் பல அசெளகரியங்களை நான் சந்திக்க வேண்டி வந்தது. அதற்கு முக்கியக் காரணம் என்று நான் நினைப்பது தேர்தலில் நின்று ஜெயிக்காமல் நான் நேரடியாகத் தலைவர் பொறுப்புக்கு வந்ததுதான் என்று நினைக்கிறேன்.

சங்கத்தில் சில தவறான நடவடிக்கைகள் என் கவனத்துக்கு வந்தது. நிறைய விதிமுறைகளையும் மாற்றி அமைக்க வேண்டி இருக்கிறது. அதையெல்லாம் சரி செய்தாலொழிய சங்கத்தின் பெயரையும் சங்க உறுப்பினர்களின் நலனையும் காப்பாற்ற முடியாதோ என்று தோணுகிறது. அதை உடனடியாகச் சரி செய்ய வேண்டியது ஒரு எழுத்தாளனாக என்னோட தலையாய கடமை என்று நான் நினைக்கிறேன்.

அதற்கு ஒரே வழி நான் உட்பட என்னை மாதிரியே போட்டி இல்லாமல் பதவிக்கு வந்த அனைவருமே ராஜினாமா செய்துவிட்டு, முறையாகத் தேர்தல் நடத்தி மறுபடியும் பொறுப்புக்கு வருவதுதான். ஆனால் மற்றவர்களை நிர்பந்திக்கும் உரிமை எனக்கு கிடையாது.

சங்கம் இருக்கிற நிலையில், இப்போது தேர்தல் நடத்துவது வீண் செலவு என்று நிறைய பேர் அபிப்ராயப்படலாம். ஆனால், சங்கமே வீணாகப் போவதைவிட, செலவு வீணாவது தப்பில்லை. என்னோட இந்த அபிப்ராயத்தை ஏற்றுக்கொள்பவர்கள் ராஜினாமா செய்யலாம். அது எப்படி நடக்கிறது என்று பார்த்துவிட்டு, அதற்குப் பிறகு தேர்தலை நடத்த முடிவு செய்தால், நான் அதில் மீண்டும் தலைவர் பதவிக்கு முறையாக நின்று மெஜாரிட்டி ஓட்டோட ஜெயித்து பொறுப்பை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து கடமையோட செயல்படுகிறேன்.

இப்படிக்கு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்யும் கே.பாக்யராஜ்.

எனக்கு நேர்ந்த அசெளகர்யங்கள் என்ன? ஒழுங்கீனங்கள் என்ன என்பதை, சங்க நலன், நற்பெயர் கருதி நான் வெளியிட விரும்பவில்லை.

அத்துடன், ஏ.ஆர்.முருகதாஸிடம் நான் கெஞ்சியும் உடன்படாதாதலே வேறு வழியே இல்லாமல் சன் பிக்சர்ஸ் போல ஒரு பெரிய நிறுவனத்தின், மிகப்பெரிய படமான 'சர்கார்' படக் கதையை நான் வெளியே சொல்ல வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டேன். இருந்தாலும் தவறு என உணர்ந்து சம்பந்தப்பட்ட சன் பிக்சர்ஸ் தயாரிப்பாளிடம் மன்னிப்பு கோருகிறேன்''.

இவ்வாறு பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

Next Story