தமிழகத்தில் கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.158 கோடி முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒதுக்கீடு


தமிழகத்தில் கோடையில் குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.158 கோடி முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஒதுக்கீடு
x
தினத்தந்தி 1 Feb 2019 5:00 AM IST (Updated: 1 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், தமிழகத்தில் கோடைக்கால குடிநீர் தேவையை சமாளிக்க ரூ.158 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

சென்னை, 

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. வடகிழக்கு பருவமழையின்போது போதிய மழை இல்லாததை கருத்தில் கொண்டு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரைகள் வழங்கினார்.

அதன் விவரம் வருமாறு:-

* நகர் மற்றும் கிராமப்புறங்களில் தடையின்றி சீரான குடிநீர் வினியோகம் செய்வதை அதிகாரிகள் உறுதிசெய்ய வேண்டும்.

* சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர் வழங்கல் பணிகளை விரைவில் முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.

* ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அளவில் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு இம்மாதத்தில் குறைந்தபட்சம் 3 முறை சென்று குடிநீர் திட்ட பணிகள், குடிநீர் வினியோகம், தெரு விளக்குகள் எரிவது மற்றும் துப்புரவுப் பணிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* மாவட்டங்களில் புதிய ஆழ்துளை கிணறுகளை அமைத்தல், ஏற்கனவே உள்ள ஆழ்துளை கிணறுகளில் குடிநீர் குழாய்களை சீர் செய்தல், செயல்படாத ஆழ்துளை கிணறுகளை புதுப்பித்தல், தண்ணீர் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிப்பு அமைப்பாக மாற்றுதல் போன்ற பணிகளை போர்க் கால அடிப்படையில் கலெக்டர் கள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிவுரைகளை முதல்-அமைச்சர், அதிகாரிகளுக்கு வழங்கினார்.

மேலும், சென்னையில் கோடைக்காலத்தின்போது சீரான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் வாரியத்துக்கு ரூ.122 கோடியும், நகர மற்றும் கிராமப் பகுதிகளில் குடிநீர் திட்டப் பணிகள் மேற்கொள்வதற்காக, தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.36 கோடியும் என மொத்தம் ரூ.158 கோடி நிதியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கீடு செய்தார்.

Next Story