கிராம சபை கூட்டங்களில் தி.மு.க.வினரே கேள்வி கேட்கின்றனர்; அமைச்சர் செல்லூர் ராஜூ

கிராம சபை கூட்டங்களில் தி.மு.க.வினரே கேள்வி கேட்கின்றனர் என அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
சென்னை,
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பாகல்பட்டி கிராமத்தில் தி.மு.க. சார்பில் நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலின், தமிழகத்தில் 12,617 கிராம ஊராட்சிகள் உள்ளன. கடந்த 3ந்தேதி திருவாரூரில் கருணாநிதியின் தொகுதியில், நான் இந்த ஊராட்சி சபை கூட்டத்தை தொடங்கி வைத்தேன். அதைத்தொடர்ந்து எல்லா தொகுதிகளிலும் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது.
உள்ளூர் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை நீங்கள் தேர்வு செய்கிறீர்கள். அவர்கள் கிராமத்திற்கு என்று ஒதுக்கப்படும் நிதியை பயன்படுத்தி உங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றினர். தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பும் இல்லை. ஆட்சியும் முறையாக நடக்கவில்லை. இதேபோல் மத்தியிலும் ஆட்சி எதுவும் முறையாக நடக்கவில்லை. இதனால் நாடு இன்றைக்கு குட்டிச்சுவராக, திசை மாறி போய்க்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தில் ‘கரப்சன், கமிஷன், கலெக்சன்’ என்பதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் லட்சியம், கொள்கை ஆகும். நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டசபை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் தற்போது உள்ள ஆட்சியை அகற்ற அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கூறினார். அவர் நடத்தும் கூட்டங்களில் மக்கள் சார்பில் சிலர் கேள்விகளும் எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ பேசும்பொழுது, ஸ்டாலின் நடத்தும் கிராம சபை கூட்டங்களில் தி.மு.க.வினரே கேள்விகள் கேட்கின்றனர். 3 மாதங்களில் ஆட்சியமைப்போம் என்று ஸ்டாலின் தான் சொல்கிறார், மக்கள் சொல்லவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story