வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு


வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க தடை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 7 March 2019 5:59 AM GMT (Updated: 7 March 2019 7:29 PM GMT)

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வழங்க தடை இல்லை என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சென்னை,

தமிழகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள சுமார் 60 லட்சம் ஏழை தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு சிறப்பு உதவித்தொகையாக தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார். இந்த திட்டத்துக்கு தடை கேட்டு விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், ‘வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தொகையை வழங்காமல், தேர்தலை மனதில் கொண்டு அனைத்து குடும்பத்துக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கும் பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் இந்த தொகையை வழங்கவும், இதுதொடர்பான நிபந்தனைகளை பின்பற்றவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும். அதுவரை இந்த திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் ‘இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறப்போகும் பயனாளிகளின் விவரங்களை அரசு தரப்பும், இந்த வழக்கு தொடர்பான கூடுதல் விவரங்களை மனுதாரர் தரப்பும் தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

அதன்படி அரசு தரப்பில் பயனாளிகள் மற்றும் இந்த திட்டத்துக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை குறித்த விவரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று பிறப்பித்தனர். அதில், ‘வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழைத்தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறையை அரசு பின்பற்றி உள்ளதால், அதில் ஐகோர்ட்டு தலையிட வேண்டிய அவசியம் இல்லை. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story