அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டினர்


அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மகளிர் தினம் கொண்டாட்டம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கேக் வெட்டினர்
x
தினத்தந்தி 9 March 2019 4:30 AM IST (Updated: 9 March 2019 12:57 AM IST)
t-max-icont-min-icon

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

சென்னை, 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேக் வெட்டி சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடினர்.

சர்வதேச மகளிர் தினம்

சர்வதேச மகளிர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதன்படி, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திலும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க. மகளிர் அணி மாநில செயலாளர் விஜிலா சத்யானந்த் எம்.பி., மற்றும் இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி ஆகியோர் தலைமையில் மகளிர் தின கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மகளிர் அணியை சேர்ந்த பெண்கள் குழு குழுவாக ஒரே வண்ணத்தில் சேலைகள் அணிந்து வந்திருந்தனர்.

கேக் வெட்டி கொண்டாட்டம்

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு மகளிர் அணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கட்சி அலுவலக வாசலில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் மகளிர் அணியினர் வழங்கிய பூங்கொத்துகளை பெற்றுக்கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தனர்.

பின்னர், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ராட்சத கேக்கை வெட்டி மகளிர் அணியினருக்கு வழங்கியதுடன் தங்கள் மகளிர் தின வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதை தொடக்கி வைக்கும் வகையில் 2 பெண்களுக்கு தையல் மிஷின்களும், 2 பெண்களுக்கு இஸ்திரி பெட்டிகளையும் வழங்கினார்.

ஆயிரம் பேருக்கு சேலைகள்

விழாவில், 15 பேருக்கு தையல் மிஷின்களும், 15 பேருக்கு இஸ்திரி பெட்டி, 6 பேருக்கு தள்ளுவண்டி, ஆயிரம் பேருக்கு சேலைகள் என ஆயிரத்து 411 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் மதிய உணவும் வழங்கப்பட்டது.

மகளிர் தின கொண்டாட்டத்தை முடித்துவிட்டு கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட, ஓ.பன்னீர்செல்வம் மகளிருக்கு இனிப்புகளை வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டார்.

Next Story