‘தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்யுங்கள்’ தேர்தல் கமிஷனர்களிடம் அ.தி.மு.க. வேண்டுகோள்

வேலூரில் வருமான வரித்துறை சோதனையில் பிடிபட்ட பணத்துக்கு தொடர்பிருந்தால், தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அ.தி.மு.க. வேண்டுகோள் விடுத்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக தேர்தல் கமிஷனர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா ஆகியோர் நேற்று முன்தினம் சென்னை வந்தனர். அவர்கள் நேற்று கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதில் பா,ஜ.க., காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, திரிணாமுல் காங்கிரஸ், அ.தி.மு.க, தி.மு.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தேர்தல் கமிஷனர்களை சந்தித்து பேசினர். அப்போது தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உடனிருந்தார்.
பின்னர் கட்சிகளின் பிரதிநிதிகள் அங்கிருந்த நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-
ரு.32 கோடி
அமைச்சர் டி.ஜெயக்குமார் (அ.தி.மு.க.):- தி.மு.க. பிரமுகர்களின் இல்லங்களில், பூத் வாரியாக பணம் வைக்கப்பட்டுள்ளதாக வீடியோ வந்துள்ளது. முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கு வேண்டப்பட்டவரின் வீட்டில் நடந்த சோதனை வீடியோவை பார்த்தாலே தெரியும்.
மொத்தம் ரூ.32 கோடி கைப்பற்றப்பட்டதாக ஒரு தகவல் வந்துள்ளது. ஜனநாயகத்திற்கு இது பேராபத்து. ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைக்கின்ற நிலை இது. இதனை எந்த நிலையிலும் அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தினோம்.
தகுதி நீக்கம்
கைப்பற்றப்பட்ட பணம் எந்த வங்கியிலிருந்து எடுக்கப்பட்டது? அதை யார் எடுத்தது? முன்னாள் அமைச்சர் துரைமுருகனுக்கும், இந்த பணத்தை வங்கியிலிருந்து எடுத்தவருக்கும் என்ன தொடர்பு?
இந்த விவரங்களை கண்டுபிடித்து அவர்கள் மீது தகுந்த கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பணம் வேட்பாளருக்கு சொந்தமானது என்று நிரூபிக்கப்பட்டால் அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்ற கருத்தை நாங்கள் தெரிவித்துள்ளோம்.
சென்னையில் நடந்த சோதனையில் ரூ.15 கோடி பிடிபட்டதற்கும், அ.தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
பழிவாங்கும் செயல்
ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.):- தேர்தல் கமிஷனர்களிடம் 5 மனுக்களை அளித்துள்ளோம். சுப்ரீம் கோர்ட்டில் அளித்த உறுதிமொழியின்படி, தற்போது விடுபட்டுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கும் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம்.
கடந்த இரண்டு மூன்று நாட்களாக நடைபெற்று கொண்டிருக்கிற சோதனைகள், திட்டமிட்டு எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கும் நோக்கம் ஆகும். முதல்-அமைச்சரும், மற்ற அமைச்சர்களும் எங்கெல்லாம் பணம் வைத்துள்ளார்கள் என்று புகார் செய்தும், அந்த புகார்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
ஜெயலலிதா படம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் படமும், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் படமும் சேர்ந்து காப்பீடு திட்டம் தொடர்பான அறிவிப்பு, தமிழகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த தபால்களை நகலுடன் அளித்துள்ளோம்.
ஒரு தபால் அனுப்புவதற்கு ரூ.4 செலவாகும். அப்படி 6 கோடி பேருக்கு அனுப்புவதற்கு ரூ.24 கோடி செலவாகும். இதை தமிழக அரசு தவறாக அவர்களின் கட்சி பிரசாரத்திற்கு பயன்படுத்தியுள்ளது. அந்த தொகையை ஆளும் கட்சியிடம் இருந்து வசூலிக்க வேண்டும் என்று கேட்டுள்ளோம்.
சென்னையில் ரூ.15 கோடி பிடிபட்ட விவகாரத்தில் சபேசன் என்பவர் அமைச்சர் ஒருவரின் பினாமி என்ற ஆதாரம் கிடைத்துள்ளது. ஒரு கல்வியாளர் வீட்டில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி பதுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இது பற்றியும் புகார் அளித்துள்ளோம்.
தகுதி இழப்பு
திருமலைசாமி (பா.ஜ.க.):- தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மகன் போட்டியிடும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டுள்ளது. பணம் வினியோகிக்கும் வேட்பாளரை தகுதி இழப்பு செய்ய வேண்டும். ராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது கொலைவெறி தாக்குதல் நடந்துள்ளது. எனவே பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தோம்.
கராத்தே தியாகராஜன், தாமோதரன், நவாஸ் (காங்கிரஸ்):- எங்கள் கோரிக்கை குறித்து தெரிவிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவை தொடர்பு கொண்டால் அவர் தொலைபேசி அழைப்புகளை எடுப்பதே இல்லை. இதை அவர் முன்னிலையிலேயே தேர்தல் கமிஷனர்களிடம் புகார் கூறினோம். தபால் வாக்குகளை மொத்தமாக போலீஸ் சூப்பிரண்டிடமும், கலெக்டர்களிடமும் வழங்குகிறார்கள். இதையும் புகாராக கூறியுள்ளோம்.
இடைத்தேர்தல்
மதிவாணன் (தே.மு.தி.க.):- எங்கள் சின்னமான முரசு சின்னம் போல கூடை சின்னமும் உள்ளதால், கூடை சின்னத்தை நிரந்தரமாக நீக்க வேண்டும் என்று மீண்டும் நினைவுபடுத்தினோம்.
ஆறுமுக நயினார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):- காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தும்படி கோரிக்கை வைத்தோம்.
வீரபாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு):- தேர்தலுக்கு பிறகு ரூ.2 ஆயிரம் கிடைக்கும் என முதல்-அமைச்சர் பேசி வருவது தேர்தல் விதிகளுக்கு முரணானது என குறிப்பிட்டோம்.
தேசியவாத காங்கிரஸ் சார்பில் ஜி.பி.சாரதி தேர்தல் கமிஷனர்களை சந்தித்து கோரிக்கைளை வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story