தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு


தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 5:15 AM IST (Updated: 6 April 2019 12:39 AM IST)
t-max-icont-min-icon

தி.மு.க.வுக்கு மக்கள் வாக்களிக்க தயாராகி விட்டார்கள் என மு.க. ஸ்டாலின் கூறினார்.

கரூர், 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கரூர் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து கரூரில் பேசியதாவது:-

ஆட்சி மாற்றம்

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட போகிறது. தி.மு.க.வுக்கு வாக்களிக்க தயாராகி விட்டீர்கள் என்பதற்கு, நீங்கள் திரண்டு இருக்கக்கூடிய இந்த காட்சியே சாட்சியாக இருக்கிறது.

துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு கடைசி வரை சீட் கிடைக்குமா? என்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு மட்டுமல்லாமல் அவருக்கே சந்தேகம் இருந்து வந்தது. ஏனெனில் அ.தி.மு.கவில் அவர் எந்த அணியில் இருக்கிறார் என்பதே எல்லோருக்கும் குழப்பம், அவருக்கே குழப்பம் தான். மோடியின் கையை காலாக நினைத்துக்கொண்டு வணங்கி கொண்டிருக்கும் அந்த கட்சியில் இருந்து கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு எதையும் செய்யவில்லை என்று சொன்னவர் நம்மை எதிர்த்து நிற்கும் வேட்பாளர் தம்பிதுரை. அந்த வார்த்தைகளை நான் அவரிடம் இருந்து கடன் வாங்கி இப்போது உங்களிடம் சொல்லப்போகிறேன்.

குற்றம்சாட்டிய தம்பிதுரை

மத்திய பட்ஜெட் குறித்து நாடாளுமன்றத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை பேசும்போது, “இடைக்கால பட்ஜெட்டில் பெரிய சலுகைகள் இல்லை, இது பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையாக விளங்கி கொண்டிருக்கின்றது. பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை என்று அறிவித்திருக்கிறார்கள், அதே போதுமானதல்ல. குறைந்தபட்சம் ரூ.12 ஆயிரம் வழங்கிட வேண்டும். தற்போது அறிவித்திருக்கக்கூடிய சலுகைகளை ஏன் ஏற்கனவே அறிவிக்கவில்லை” என்று கேட்டார். அப்படிப்பட்டவர் தான் பா.ஜ.க.வின் துணையோடு இங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.

சிறுபான்மையினர் நன்மைக்காக போதிய நிதி ஒதுக்கவில்லை என்று பகிரங்கமாக நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டியவர் தம்பிதுரை. அவர் தான் இப்போது மோடிக்கு ஆதரவாக பேசிக்கொண்டிருக்கிறார். தம்பிதுரை பிரசாரம் செய்யும் போது, 4 வருடமாக ஏன் வரவில்லை என்று மக்கள் கேட்டனர். அதற்கு அவர் ஓட்டு போட்டா போடுங்க, இல்லாவிட்டால் போங்க. உங்கள் காலில் எல்லாம் நாங்கள் விழ முடியாது என்று சொன்னார். மக்களிடம் ஓட்டுகள் வாங்கிக்கொண்டு பேசுகிற பேச்சா இது.

நீட் தேர்வு

இந்தியாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருப்பது போன்றும், தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் இருப்பது போன்றும் பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. நம்மை பார்த்து விமர்சித்து கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து நிச்சயம் விதிவிலக்கு வழங்கப்படும். இதில் மாநிலத்துக்கு தான் உரிமை இருக்கிறது, மத்திய அரசு தலையிட முடியாது என்று தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் கட்சி சொல்லியிருக்கிறது.

கருணாநிதி சொன்ன மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற முழக்கத்துக்கு ராகுல்காந்தி வழிமொழிந்து இருக்கிறார் என்று பார்க்கும்போது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதி சார்பில் ராகுல்காந்திக்கு நன்றியை செலுத்த விரும்புகிறேன்.

இடைத்தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 நாம் தான். அதுமட்டுமா?. தமிழகத்தில் நடைபெறக்கூடிய 18 சட்டமன்ற தொகுதிகளிலும் வெல்லப்போகிறோம். அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி நின்று வெல்லப்போகிறார். அதில் எந்த மாற்றமும் கிடையாது. இந்த தொகுதி தேர்தலை நிறுத்தி வைத்து இருக்கிறார்கள். நீதிமன்றம் இந்த தடை உத்தரவு போடவில்லை. வழக்கு இருக்கிறது அவ்வளவுதான். அந்த வழக்கை பயன்படுத்திக்கொண்டு திட்டமிட்டு வேண்டுமென்றே மூன்று தொகுதிகளில் தேர்தல் நடத்தாமல் இருக்கிறார்கள். தற்போது சூலூரோடு சேர்த்து 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நான்கையும் சேர்த்து 22 தொகுதி ஆகிவிட்டது. அனைத்து தொகுதிகளிலும் நாம் வென்றால் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி இருக்குமா?.

அதனால் தான், தி.மு.க. வெற்றி பெற்றுவிடும். நாற்பதுக்கு நாற்பது. 18-க்கு 18 என்ற அடிப்படையில், பல கருத்துக்கணிப்பு செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஆட்சி போய்விடும் என்ற காரணத்தால், நாடாளுமன்ற தேர்தல் போனாலும் பரவாயில்லை, சட்டமன்றத்தையாவது காப்பாற்ற வேண்டும் என்று திட்டமிட்டு அதற்காக துரைமுருகன் வீட்டில் சோதனை நடத்தினார்கள். இரண்டு நாட்களாக சோதனை செய்து ஏதாவது எடுத்துக்கொண்டு வந்தார்களா?.

ஆட்சி நீடிக்குமா?

மத்தியில் ஆட்சிக்கு வரப்போவது நம்முடைய ராகுல்காந்தி தான். எனவே காங்கிரஸ் கட்சி ஆட்சி வந்ததற்கு பிறகு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி ஒரு நிமிடமாவது நீடிக்குமா?. அதை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். எனவே, அந்த உரிமையோடு உணர்வுகளோடு உங்களிடத்தில் ஓட்டு கேட்க வந்திருக்கின்றேன். எனவே, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு நீங்கள் வெற்றியை தேடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Next Story