விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை தேர்தல் ஆணையத்துக்கு, டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள்
x
தினத்தந்தி 9 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-10T01:17:21+05:30)

பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் வன்முறையில் ஈடுபட்டு வரும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் மற்றும் போலீசாருக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

சென்னை, 

தோல்வி பயம்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க. போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது.

குறிப்பாக பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிக்க செல்லும் அ.தி.மு.க தலைமையிலான குழுவினரை தடுப்பது, திட்டுவது போன்ற வன்முறை வேலைகளை திட்டமிட்டு செய்கின்றனர். இதனை தட்டிக்கேட்பவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் கொடுத்து விடுகின்றனர்.

நடவடிக்கை வேண்டும்

தோல்வி பயம் வாட்டுவதால் தான் இத்தகைய வன்முறைகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தோல்வி பயம் காரணமாக கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடையின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story