கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்தது பன்வாரிலால் புரோகித் சிக்கன நடவடிக்கை எதிரொலி


கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்தது பன்வாரிலால் புரோகித் சிக்கன நடவடிக்கை எதிரொலி
x
தினத்தந்தி 17 April 2019 9:45 PM GMT (Updated: 2019-04-18T01:28:59+05:30)

பன்வாரிலால் புரோகித் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்துள்ளது.

சென்னை, 

பன்வாரிலால் புரோகித் சிக்கன நடவடிக்கை எதிரொலியாக கவர்னர் மாளிகை செலவு பெருமளவில் குறைந்துள்ளது.

பன்வாரிலால் புரோகித்

தமிழக கவர்னராக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்று கடந்த அக்டோபர் மாதம் 6-ந் தேதியோடு ஒரு வருடம் நிறைவடைந்தது. அவர் பதவி வகித்த ஒரு வருட காலத்தில் தேவை இல்லாத செலவுகளை குறைத்து, மேலாண்மையை திறம்பட கவனித்ததால் பொருளாதார செலவினங்கள் குறைக்கப்பட்டிருப்பது கணக்குகள் மூலம் தெரியவந்துள்ளது. துடிப்பான கவர்னர் பன்வாரிலால் புரோகித் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். மேலும் 20 பல்கலைக்கழகங்களில் தலா 2 முறை பட்டமளிப்பு விழாக்களையும் நிறைவு செய்திருக்கிறார்.

இதில் தேவை இல்லாத கவர்னர் மாளிகை செலவினங்களை அவர் பெருமளவு குறைத்திருக்கிறார். இதன் தொடர்ச்சியாக பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்ற ஒரு வருடத்தில் செய்யப்பட்ட செலவு, அதற்கு முந்தைய ஆண்டு செலவு செய்யப்பட்ட தொகையோடு ஒப்பிடுகையில் 3-ல் ஒரு பங்காக குறைந்துள்ளது.

அதாவது பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்பதற்கு முந்தைய ஆண்டில் (6-10-16 முதல் 5-10-17 வரை) உணவு, விருந்தோம்பல் செலவு, சுற்றுலா மற்றும் எரிபொருள் செலவு, வீடு, அலுவலகங்களை பராமரித்தல் மற்றும் தோட்டச்செலவு, மின்சார கட்டணம், தண்ணீர் கட்டணம் ஆகியவற்றுக்கு ரூ.3 கோடியே 18 லட்சத்து 50 ஆயிரத்து 982 செலவு செய்யப்பட்டிருந்தது. பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்ற ஒரு வருடத்தில் (6-10-17 முதல் 5-10-18 வரை) மேற்கண்ட செலவுகளுக்கு ரூ.1 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 462 மட்டுமே செலவு செய்யப்பட்டுள்ளது.

சிக்கன நடவடிக்கை

செலவு குறைவதற்கு கவர்னர் மாளிகையில் எடுக்கப்பட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளே காரணம் ஆகும். அதன் விவரம் வருமாறு:-

* கவர்னர்கள் ரெயிலில் ‘சலூன்’ என்று அழைக்கப்படும் தனி சிறப்பு சொகுசு பெட்டியிலும், விமானங்களில் உயர் வகுப்பு பிரிவிலும் பயணம் செய்ய தகுதி படைத்தவர்கள். முன்னதாக ஹெலிகாப்டரிலும், தனி விமானங்களிலும் பயணம் மேற்கொண்டு வந்தார்கள். பன்வாரிலால் புரோகித் மாநிலம் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ரெயில்களில் சாதாரண பெட்டிகளிலும், விமானங்களில் பொருளாதார சிக்கன பிரிவிலும் பயணிகளோடு, பயணியாகவே அவர் பயணம் செய்தார். இதனால் கடந்த ஆண்டு ரூ.96.92 லட்சமாக இருந்த பயண செலவு, ரூ.20.13 லட்சமாக குறைந்தது.

* பல்கலைக்கழக வாகனங்களின் பயன்பாடு, குறிப்பாக அண்ணா பல்கலைக்கழக வாகனங்கள் ராஜ் பவன் அதிகாரிகள் பயன்பாட்டுக்கு பரவலாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த நடைமுறை இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. பல்கலைக்கழகத்துக்குரிய வாகனங்கள், அவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

உணவுக்கு கட்டணம்

* பர்னிச்சர்கள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்றப்படுவதால் முறைகேடுகள் செய்யப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனால் தூய்மையாக பராமரித்தல் மற்றும் தோட்டச்செலவு கணிசமாக குறைந்துள்ளது.

* கவர்னர் மாளிகை வளாகத்திலேயே இயற்கை விவசாய முறையில் பயிர்கள் பயிரிடப்படுவதால் சந்தையில் இருந்து காய்கறிகள் வாங்குவது தவிர்க்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சமையல் அறையில் தயாரிக்கப்படும் உணவுகளுக்கு கவர்னர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் பணம் கொடுத்துவிடுகின்றனர். தற்போதைய கவர்னர் பொறுப்பு ஏற்ற பின்னர் சிற்றுண்டிக்கான கட்டணம் ரூ.10-ல் இருந்து ரூ.50 ஆகவும், மதியம் மற்றும் இரவு சாப்பாடு ரூ.12-ல் இருந்து ரூ.80 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

மின்சார கட்டணம்

* ராஜ் பவனில் உள்ள அனைத்து விளக்குகளும் எல்.இ.டி.யாக (குறைவான மின்சாரத்தை உமிழும் விளக்குகள்) மாற்றப்பட்டுள்ளது. விளக்குகள், மின்விசிறிகள், ஏ.சி., ‘வாட்டர் ஹீட்டர்’ ஆகியவை பயன்பாடு இல்லாத நேரத்தில் அணைக்கப்படுகின்றன. இதனால் மின்சார கட்டணம் கணிசமாக குறைந்துள்ளது. இதேபோல கவர்னர் மாளிகை வளாகத்தில் தண்ணீர் வீணாவது பெருமளவில் குறைந்துள்ளது.

* பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் உள்ள தொகைகள் செலுத்தப்பட்டுள்ளன. பன்வாரிலால் புரோகித் பொறுப்பு ஏற்பதற்கு முன்பு 2016-17-ம் நிதி ஆண்டில் ரூ.53.42 லட்சம் கட்டணம் செலுத்தவேண்டியது இருந்தது. தற்போது 2017-18 மற்றும் 2018-19-ம் ஆண்டுக்கான அனைத்து கட்டணங்களும் பாக்கி இல்லாமல் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டன. இதன்மூலம் ரூ.19.82 லட்சம் மிச்சப்படுத்தப்பட்டு, கருவூலத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேற்கண்ட தகவல் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story