பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு இதுவரை 62 ஆயிரம் மாணவர்கள் பதிவு


பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு இதுவரை 62 ஆயிரம் மாணவர்கள் பதிவு
x
தினத்தந்தி 8 May 2019 10:28 AM GMT (Updated: 8 May 2019 10:28 AM GMT)

பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு இதுவரை 62 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர் என தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவித்து உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 19-ந் தேதி வெளியானது. இதைத் தொடர்ந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பி.இ., பி.டெக் போன்ற என்ஜினீயரிங் சேர்க்கைக்கான தற்காலிக அட்டவணை  வெளியிடப்பட்டது.

பி.இ., பி.டெக். படிப்புக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமே பெறப்பட்டன. அதேபோன்று கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டது. இந்த ஆண்டும் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலமே பெறப்படுகிறது. கலந்தாய்வும் ஆன்லைன் மூலமே நடத்தப்படுகிறது.

மாணவ-மாணவிகள் மே 2-ந் தேதி முதல் ஆன்லைனில் பதிவு செய்து விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் அனுப்ப மே 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். ஜூன் மாதம் 3-ந் தேதி ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 6-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் செயல்படும் 42 உதவி மையங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். இதன்பின்பு, ஜூன் 17-ந் தேதி ரேங்க் பட்டியல் வெளியிடப்படும்.

இதைத்தொடர்ந்து ஜூன் 20-ந் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஜூன் 20-ந் தேதியும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 21-ந் தேதியும், விளையாட்டு வீரர்களுக்கு 22-ந் தேதியும் நேரடி சிறப்பு கலந்தாய்வு நடக்கிறது.

பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ந் தேதி தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. தொழிற்கல்வி பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூன் 25-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த கலந்தாய்வை பொறுத்தமட்டில் நேரடியாக நடத்தப்படுகிறது.

அதேபோன்று துணை கலந்தாய்வு ஜூலை மாதம் 29-ந் தேதியும், அருந்ததியர்களுக்கான ஒதுக்கீட்டு காலி இடங்களில் ஆதிதிராவிடர் மாணவ-மாணவிகளை சேர்த்துக் கொள்வதற்கான கலந்தாய்வு ஜூலை 30-ந் தேதியும் நேரடியாக நடக்கிறது.

என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டது. இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படுகிறது. இதனால் நேரடி கலந்தாய்வை பொறுத்தமட்டில் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனரக வளாகத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படும் பொறியியல் கலந்தாய்வுக்கு இதுவரை 62 ஆயிரத்துக்கும் அதிக மாணவர்கள் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப் பதிவு, சான்றிதழ் சரிபார்ப்பு, விருப்பப்பாடம் உள்ளிட்டவை தொடர்பாக இணையதளத்தில் ஸ்கிரீன் ஷாட் மூலம் வழிகாட்டுதல்கள் மற்றும் கால அட்டவணைகள் உள்ளதாகவும் அவற்றை 1 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் பார்த்து புரிந்து கொண்டு பதிவுகளை செய்து வருவதாகவும், கூறப்பட்டுள்ளது.

இணையதள உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் கலந்தாய்வுப் பணிகள் மந்தம் என தவறான தகவல்கள் வருவதாகவும் மாணவர்கள் அவற்றை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உரிய காலத்தில் விண்ணப்பப் படிவங்களை இணையதளத்தில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story