கல்வெட்டு விவகாரம்: எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை - ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்

கல்வெட்டு விவகாரத்தில் எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேனி தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் காசி அன்னபூரணி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 2 கல்வெட்டுகள் திறக்கப்பட்டன. அதில் ஒரு கல்வெட்டில், பேருதவி புரிந்தவர் என்று ஜெயலலிதா பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றொரு கல்வெட்டில் பேருதவி புரிந்தவர்கள் என்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவருடைய மகன்களான ரவீந்திரநாத்குமார், ஜெயபிரதீப் ஆகியோரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன. இதில், ஜெயபிரதீப் என்பதற்கு பதில் ஜெயபிரதீப்குமார் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் இந்த கல்வெட்டில் தேனி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் பெயருக்கு முன்பு தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என எழுதப்பட்டு இருந்தது. வாக்கு எண்ணிக்கையே நடக்காத நிலையில் அவரை எம்.பி.யாக சித்தரித்து கல்வெட்டு வைக்கப்பட்டிருந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து வேறு பெயர்கள் பொறிக்கப்பட்டு தற்போது அந்த கல்வெட்டு மறைக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டு வைத்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கட்டாய ஓய்வு அளிக்கப்பட்ட போலீஸ்காரர் வேல்முருகன் அதை வைத்தது தெரியவந்தது.
இது தொடர்பாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் விளக்கம் அளித்துள்ளார் அதில்,
குச்சனூர் காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலய கல்வெட்டு விவகாரம் நேற்று எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது, இந்த நிகழ்வு மிகவும் கண்டிக்கத்தக்கது. தேர்தல் முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் தவறானது. எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலான செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Related Tags :
Next Story