என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு தொடங்கியது : 28-ந் தேதி வரை நடக்கிறது

என்ஜினீயரிங் ஆன்லைன் பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. வருகிற 28-ந் தேதி வரை கலந்தாய்வு நடைபெறுகிறது.
சென்னை,
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வை ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்த நிலையில், இந்த ஆண்டு முதல் தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நடத்துகிறது.
என்ஜினீயரிங் கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கடந்த மாதம் (ஜூன்) 25-ந் தேதி தொடங்கியது. சிறப்பு பிரிவு மாணவர்களான மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு நடந்து முடிந்துவிட்டது.
அதேபோல், தொழிற்கல்வி பிரிவு மாணவர்களுக்கான கலந் தாய்வும் 3 நாட்கள் நடந்தது.
இந்தநிலையில் என்ஜினீயரிங் பொது கலந்தாய்வு நேற்று தொடங்கியது. கடந்த ஆண்டு முதல் பொது கலந்தாய்வு ஆன்லைனில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் பொது கலந்தாய்வு ஆன்லைனில் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொது கலந்தாய்வில் மாணவ- மாணவிகள் எந்தெந்த நாட்களில் கலந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையிலான கால அட்டவணை கடந்த வாரம் வெளியிடப்பட்டது.
இதன்படி, மொத்தம் 4 நிலைகளில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. முதல் நிலையில் முன்வைப்பு தொகை செலுத்துதல், 2-ம் நிலையில் விருப்ப பாடப்பிரிவு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்தல், 3-ம் நிலையில் தேர்வு செய்த கல்லூரிகளின் வரிசையில் மாற்றம் இருந்தால் அதை சரிசெய்தல், 4-ம் நிலையில் கல்லூரியை உறுதி செய்தல் போன்ற 4 நிலைகளை கடந்த பிறகு தான், இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும்.
அதன்படி, 200-178 வரையிலான ‘கட்-ஆப்’ மதிப்பெண் எடுத்தவர்களுக்கான கலந்தாய்வு நேற்று தொடங்கி இருக்கிறது. வருகிற 10-ந் தேதி வரை முன்வைப்பு தொகை செலுத்தவும், 8 முதல் 11-ந் தேதி வரை விருப்ப பாடப்பிரிவு, கல்லூரிகளை தேர்வு செய்யவும் அவர்களுக்கு தேதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இதேபோல், ‘கட்-ஆப்’ மதிப்பெண் அடிப்படையில் மற்ற மாணவ-மாணவிகள் என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.
வீட்டில் இணையதள வசதி உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வை மேற்கொள்ளலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக ஏற்கனவே சான்றிதழ் சரிபார்ப்புக்கு தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையத்துக்கு சென்று கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
மேலும் தகவல்களுக்கு www.tndte.gov.in, www.tneaonline.in என்ற இணையதளத்துக்கு சென்று மாணவ-மாணவிகள் தெரிந்துகொள்ளலாம் என்று தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொது கலந்தாய்வு வருகிற 28-ந் தேதி வரை நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக துணை கலந்தாய்வு வருகிற 29-ந் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story