நின்ற கோலத்தில் எழுந்தருளினார் அத்திவரதர்! தரிசிக்க அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!


நின்ற கோலத்தில் எழுந்தருளினார் அத்திவரதர்! தரிசிக்க அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்!
x
தினத்தந்தி 1 Aug 2019 5:13 AM GMT (Updated: 1 Aug 2019 5:13 AM GMT)

காஞ்சீபுரத்தில் இன்று முதல் நின்ற கோலத்தில் எழுந்தருளினார் அத்திவரதர்! தரிசிக்க அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர்.

காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் நேற்றுவரை சயன கோலத்தில் அத்திவரதர் தரிசனம் நடைபெற்றது. கடந்த 31 நாட்களில் சுமார் 48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் அத்திவரதரை சயன கோலத்தில் தரிசனம் செய்த நிலையில் நேற்று மாலை 5 மணியுடன் தரிசனம் நிறுத்தப்பட்டு அத்திவரதரை நின்ற கோலத்துக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் இன்று அதிகாலை 5.25 மணிக்கு நின்ற கோலத்தில் அத்திவரதர் தரிசனம் தொடங்கியது.

அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அத்திவரதரை தரிசனம் செய்தனர். சயன கோலத்தில் அத்திவரதரை தரிசனம் செய்தவர்கள் மீண்டும் நின்ற கோலத்தில் தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் ஒரு நாளைக்கு 3 லட்சம் முதல் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என கூறப்படுகிறது. 

இதையடுத்து வரதராஜ பெருமாள் கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மருத்துவம், கழிவறை வசதி உள்ளிட்டவை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்தில் 6 இடங்களில் 10 ஆயிரம் பக்தர்கள் நிற்கும் வகையில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் வளாகத்துக்குள் பக்தர்களுடைய எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும் போது பக்தர்கள் இந்த கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டு பகுதி பகுதியாக பிரித்து அனுப்பப்படுவர். கூடாரங்களை சுற்றி கழிவறைகள், குடிநீர் வசதி, 24 மணி நேர அன்னதான வசதி செய்யப்பட்டுள்ளது. காவலர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திலிருந்து 7500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Next Story