‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி


‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி
x
தினத்தந்தி 11 Aug 2019 3:30 AM IST (Updated: 11 Aug 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

‘ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்று விட்டு தி.மு.க.வை விமர்சியுங்கள்’ என்று தமிழிசை சவுந்தரராஜனுக்கு கனிமொழி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனிமொழி எம்.பி. நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:-

தி.மு.க.வை விமர்சிக்க தகுதி இல்லை

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க.வின் வெற்றி தாமதமாக வருவதற்கு என்ன காரணம் என்று அனைவருக்கும் தெரியும். அங்கு பல சூழ்ச்சிகள் காரணமாக தேர்தல் தடுத்து நிறுத்தப்பட்டது. பின்னர் தற்போது தேர்தல் நடத்தப்பட்டு அதில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

கடந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட வேலூர் தொகுதியில் தி.மு.க. வாக்கு வித்தியாசம் குறைவு தான். இது தி.மு.க.விற்கு வெற்றி இல்லை என்று பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்து உள்ளார். அவர் ஏதாவது ஒரு தொகுதியிலாவது போட்டியிட்டு வெற்றி பெற்று விட்டு, தி.மு.க.வை விமர்சித்தால் பரவாயில்லை. ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் அவர் தி.மு.க.வை விமர்சித்து உள்ளார். தி.மு.க.வை விமர்சிப்பதற்கு தமிழிசைக்கு தகுதி இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க.விற்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை.

எதிர்ப்பது ஏன்?

லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தது. அதை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை தான் தி.மு.க. எதிர்க்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story