பா.ஜ.க. நடத்திய முப்பெரும் விழாவையொட்டி நிர்மலா சீதாராமன் பாதயாத்திரை


பா.ஜ.க. நடத்திய முப்பெரும் விழாவையொட்டி நிர்மலா சீதாராமன் பாதயாத்திரை
x
தினத்தந்தி 31 Oct 2019 10:22 PM GMT (Updated: 31 Oct 2019 10:22 PM GMT)

பா.ஜ.க. நடத்திய முப் பெரும் விழாவையொட்டி சென்னையில் நிர்மலா சீதாராமன் 3 கி.மீ. தூரம் பாதயாத்திரை சென்றார்.

சென்னை,

காந்தியின் 150-வது ஆண்டு பிறந்த தின பாதயாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேல் 145-வது ஆண்டு பிறந்தநாள் ஒற்றுமை நடை பயண விழா, தமிழையும், தமிழர் பண்பாட்டையும் உலகுக்கு பறைசாற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிக்கும் விழா ஆகிய முப்பெரும் விழா தமிழக பா.ஜ.க. சார்பில் சென்னை அமைந்தகரையில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் பங்கேற்க வந்த அவருக்கு தமிழக பா.ஜ.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் அங்கு வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவப்படத்துக்கு நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து புல்லா அவென்யூவில் இருந்து நிர்மலா சீதாராமன் பாதயாத்திரையை தொடங்கினார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, லட்சுமி டாக்கீஸ் சாலை, ஷெனாய் நகர் 4-வது குறுக்குத் தெரு, கஜபதி தெரு, பரமேஸ்வரன் நகர் வரை என சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை சென்றார்.

பூரண கும்ப மரியாதை

கஜபதி தெரு சந்திப்பில் உள்ள வடிவுடையம்மன் கோவில் முன்பு வைக்கப்பட்டிருந்த சர்தார் வல்லபாய் படேல் உருவப்படத்துக்கு நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அப்போது பா.ஜ.க. மகளிரணியினர் நிர்மலா சீதாராமனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். இதேபோல ஷெனாய் நகர் 4-வது குறுக்குத் தெருவில் பா.ஜ.க. கொடியை அவர் ஏற்றி வைத்தார். பாதயாத்திரையின்போது பொதுமக்களை நோக்கி கும்பிட்டவாறு நிர்மலா சீதாராமன் சென்றார்.

ஓரிரு இடங்களில் மழைச் சாரல் விழுந்தபோதும் குடை எதுவும் பிடிக்காமல், சாலையில் தேங்கியிருந்த மழைநீரையும் பொருட்படுத்தாமல் அவர் நடந்து சென்றார். பாதயாத்திரையில் தமிழக பா.ஜ.க. துணைத் தலைவர் எம்.என்.ராஜா, பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், மீனவர் அணி தலைவர் எஸ்.சதீஷ்குமார், முன்னாள் அமைச்சர் ஹண்டே, நடிகை கவுதமி உள்பட ஏராளமான பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர்.

வேட்டி, சட்டை, துண்டு

பாதயாத்திரையில் கலந்து கொண்டவர்கள் கட்சி கொடியையும், ‘கதர் ஆடை அணிவோம், காந்தியின் கனவை நனவாக்குவோம்’, ‘தூய்மை நாட்டையும், வீட்டையும் உயர்த்தும்’ என்பது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் ஏந்தி சென்றனர். பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நிர்மலா சீதாராமன் சென்ற இடங் களில் கட்சி கொடி மட்டும் கட்டப்பட்டிருந்தது. மாமல்லபுரத்தில் சீன அதிபர் ஜின்பிங்கை சந்தித்தபோது பிரதமர் மோடி வேட்டி, சட்டை, துண்டு அணிந் திருந்ததுபோல பாதயாத்திரையில் பங்கேற்ற ஆண் தொண்டர்கள் வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தனர்.

Next Story