மாநில செய்திகள்

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்; தமிழகம் முழுவதும் 5 லட்சம் மனுக்கள் ஏற்பு + "||" + chief Minister's Special Grievance Camp; 5 lakh petitions accepted across Tamil Nadu

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்; தமிழகம் முழுவதும் 5 லட்சம் மனுக்கள் ஏற்பு

முதல்-அமைச்சரின் சிறப்பு குறைதீர்ப்பு முகாம்; தமிழகம் முழுவதும் 5 லட்சம் மனுக்கள் ஏற்பு
தமிழகம் முழுவதும் முதல்-அமைச்சரின் குறைதீர்ப்பு முகாம்களில் 9 லட்சத்து 72 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 5 லட்சம் மனுக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளன.
சென்னை, 

முதல்-அமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டம் சட்டசபையில் அவை விதி 110-ன் கீழ் கடந்த ஜூலை 18-ந் தேதியன்று அறிவிக்கப்பட்டு, ஆகஸ்டு 19-ந் தேதியன்று சேலம் மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றனர்.

இத்திட்டத்தில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 72 ஆயிரத்து 216 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 5 லட்சத்து 11 ஆயிரத்து 186 கோரிக்கை மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 4 லட்சத்து 37 ஆயிரத்து 492 மனுக்கள் பல்வேறு காரணங்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. மீதமுள்ள 23 ஆயிரத்து 538 மனுக்கள் நிலுவையில் உள்ளன.

ஏற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் அதிகபட்சமாக சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகை கேட்டு 1 லட்சத்து 43 ஆயிரத்து 993 மனுக்களும், பட்டா மற்றும் நிலம் சார்ந்த 1 லட்சத்து 83 ஆயிரத்து 682 மனுக்களும், கிராமம், நகரம் உள்கட்டமைப்பு சார்ந்த 50 ஆயிரத்து 488 மனுக்களும் வந்துள்ளன.

இந்த மனுக்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் சில உத்தரவுகளை பிறப்பித்தார். நிலுவையில் உள்ள 23 ஆயிரத்து 538 மனுக்கள் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு நவம்பர் 15-ந் தேதிக்குள் தீர்வு காணவும்; பல்வேறு காரணங்களால் ஏற்றுக்கொள்ளப்படாத மனுக்களை மாவட்ட கலெக்டர்கள் மறுஆய்வு செய்து ஏற்றுக்கொள்ள வாய்ப்புள்ள இனங்களில் உரிய தீர்வு காணவும்; தீர்வு கண்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட மனுக்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இம்மனுக்கள் மீதான தாலுகா அளவிலான குறைதீர்வு கூட்டம், வரும் 9-ந் தேதியன்று சேலம் மாவட்டம், எடப்பாடி தாலுகா, கொங்கனாபுரம் ஒன்றிய அலுவலகத்தில் முதல்-அமைச்சர் தொடங்கி வைக்கவும், அதைத்தொடர்ந்து மாவட்டந்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தலைமையில் 20-ந் தேதிக்குள் தாலுகா அளவில் கூட்டம் நடத்தப்பட்டு, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கவும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டார்.

மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.