வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை


வேகமாக நிரம்பும் வைகை அணை; கரையோர மக்களுக்கு  வெள்ள அபாய எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 Dec 2019 5:37 AM GMT (Updated: 4 Dec 2019 5:37 AM GMT)

வைகை அணை வேகமாக நிரம்புவதால், மதுரை வைகை ஆற்றின் கரையோர மக்களுக்கு, மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

சென்னை

கேரளா மற்றும் வைகை அணை நீர்ப்பிடிப்பு பகுதி, மூல வைகை, சுருளியாறு ஆகிய பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் 67 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வினாடிக்கு 4,243 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. வைகை அணையின் மொத்த கொள்ளளவு 71 அடியாகும்.

வைகை அணையின் நீர்மட்டம், 67 அடியை கடந்துள்ளதை அடுத்து, வைகை ஆற்றங்கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 68 அடியை எட்டும்போது, இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படும். வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும்போது, இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்படும்.

வைகை அணை நிரம்புவதால், ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மேடான பகுதிக்குச் செல்லுமாறு, மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

மேலும், வைகை ஆற்றில் குளிப்பது, மீன்பிடிப்பது, கால்நடைகளை குளிப்பாட்டுவது, வாகனங்களை கழுவுதல் போன்ற நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறும், பாதுகாப்பற்ற முறையில் புகைப்படங்கள், செல்பி எடுப்பதை கண்டிப்பாக தவிர்க்குமாறும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story