தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் நேற்று அதிகாலை மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
சென்னை,
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி:-
திராவிட இயக்கத்தின் கொள்கைகளில் ஆழமான நம்பிக்கை கொண்டவரும், பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். போன்ற திராவிட இயக்க முன்னோடித் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும் கொண்டிருந்தவரும், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் இணைந்து அரசியலில் பயணித்தவரும், தி.மு.க.வின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமுற்றோம்.
75 ஆண்டுகள் பொதுவாழ்வில் பங்குபெற்று அயராது உழைத்து விடைபெற்றுச் சென்றிருக்கும் பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு தமிழக அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். க.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க.வினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலை அ.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-
தி.மு.க. பொதுச்செயலாளரும், திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவருமான பேராசிரியர் க.அன்பழகன் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். பேராசிரியர் க.அன்பழகன் ஓர் அப்பழுக்கற்ற, அழுக்காறாமையற்ற, அவாவற்ற தலைவர். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை சில நாட்களுக்கு முன் சந்தித்து நலம் விசாரித்தேன்.
உடல் நலம் தேறி மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடுவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவர் உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது. அவரது மறைவு அரசியலுக்கு பேரிழப்பு என்பதில் ஐயமில்லை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தி.மு.க.வினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-
கலைஞர் கருணாநிதிக்கு தோன்றாத் துணையாய், திராவிட இயக்கத்தின் பாதுகாப்புக் கவசமாய் புகழ்க்கொடி உயர்த்திய, தன்மானக் காவலர், இனமானத்தின் இமயமாய் செம்மாந்து திகழ்ந்த ஏந்தல், தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மறைந்தார் என்ற செய்தி, உச்சந்தலையில் விழுந்த பேரிடியாய்த் தாக்கியது.
பொது வாழ்க்கையில், அரசியலில், நிறைவாழ்வு வாழ்ந்த பேராசிரியர் க.அன்பழகனின் பெயரும், புகழும், எந்நாளும் நிலைத்து இருக்கும். பொங்கி வரும் கண்ணீருடன், ம.தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அவருக்கு இரங்கல் தெரிவிக்கின்ற முகமாக, இன்று முதல் அடுத்த 3 நாட்கள், ம.தி.மு.க. கொடிகள், அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-
தி.மு.க.வின் தூண் சாய்ந்துவிட்டது. தி.மு.க.வின் சிகரமாக இருந்த பேராசிரியர் க.அன்பழகன் மறைந்துவிட்டார். அவரது மறைவு என்பது தமிழக மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தனிப்பட்ட முறையிலும் எனது ஆழ்ந்த இரங்கலை அவரது குடும்பத்தினருக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அவரது கட்சியினருக்கும் எனது அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
முன்னாள் மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன்:-
தி.மு.க. பொதுச்செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனையையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், கட்சித் தொண்டர்கள், தலைவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதுடன், அவரது பிரிவைத் தாங்கும் மனவலிமையை தந்திடவும் எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கிறேன்.
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த்:-
தி.மு.க.வின் முக்கிய தலைவர்களில் ஒருவர், தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் போன்ற பதவிகளை வகித்தவரும், பன்முகத் திறமை கொண்டவருமான பேராசிரியர் க.அன்பழகன் இயற்கை எய்தினார் என்ற செய்தியை கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். இவரின் இழப்பு தி.மு.க.வுக்கு பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. கட்சியினருக்கும் தே.மு.தி.க. சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-
திராவிட இயக்கத் தலைவர்களில் முன்னோடியும் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவருமான தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகனின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது. தன் இறுதி மூச்சு வரை தி.மு.க.வுக்கும், மக்களுக்கும் செய்த பணிகள் பாராட்டத்தக்கது. அன்னாரது மறைவு தமிழகத்துக்கும், தி.மு.க.வுக்கும் பேரிழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் தி.மு.க.வினருக்கும், குடும்பத்தாருக்கும் த.மா.கா. சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யா:-
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் காலமான செய்தி கேட்டு துயருற்றேன். என்னுடைய சமகால அரசியல் தலைவரான அவரை, 1945-ம் ஆண்டில் இருந்து நன்கு அறிவேன். அவருடைய மறைவு தி.மு.க.வுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கும் ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. அன்னாரை இழந்து வாடும் தி.மு.க.வுக்கும், உறுப்பினர்களுக்கும், குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-
தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது மறைவால் துயருற்றிருக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், அன்னாரது குடும்பத்தாருக்கும், தி.மு.க. தொண்டர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன்:-
தமிழகத்தின் முதுபெரும் தலைவர், திராவிட சிந்தனையின் தெளிவுரை, ஏற்றுக்கொண்ட இயக்கத்தில் இறுதிவரை உறுதியோடு இருந்தவர், பேராசிரியர் அன்பழகனின் இழப்பு வேதனைக்குரியது. அவர் குடும்பத்தாருக்கும், அவரது இயக்கத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார்:-
பேராசிரியர் க.அன்பழகனின் மறைவு மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. அவரது இழப்பு தி.மு.க.வுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை பிரிந்து வாடும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், நிர்வாகிகளுக்கும், அனைத்து தொண்டர்களுக்கும், குடும்பத்தாருக்கும், உற்றார்-உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
பா.ம.க. இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்:-
தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், தி.மு.க.வுக்கும் பேரிழப்பாகும். க.அன்பழகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தி.மு.க.வை சேர்ந்தவர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:-
திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், தி.மு.க.வின் பொதுச் செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் மறைவெய்திய செய்தி கேட்டு பேரதிர்ச்சியடைந்தேன். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம். அவரை இழந்து நிற்கும் தி.மு.க.வுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:-
தி.மு.க.வில் கருணாநிதி மறைந்தவுடன் மு.க.ஸ்டாலினைத் தலைவராக ஏற்று கட்சியின் கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டுக்கு இலக்கணமாக திகழ்ந்த பண்பின் இமயம் பேராசிரியர் க.அன்பழகன். எடுத்துக்காட்டுக்கு எப்போதும் இவரே என்ற தனித் தகுதி படைத்தவர். அந்த கொள்கை மாவீரரின் மறைவுக்கு தாய்க்கழகம் தனது வேதனை மிகுந்த துயரத்தை தெரிவிப்பதுடன், அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் திராவிடர் கழகத்தின் நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு தள்ளி வைக்கப்படுகின்றன.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தவர்கள், கொள்கை குடும்பத்து தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அனைவரது துயரத்திலும், தாய்க்கழகம் பங்குபெற்று, நாம் ஒருவரை ஒருவர் தேற்றிக்கொண்டு, லட்சியச் சுடரை அணையாது காத்து, கொள்கைப் பயணத்தைத் தொடருவோமாக. பேராசிரியர் க.அன்பழகன் என்றும் நமக்கு மங்காத ஒளியாவார். பாடம் எடுக்கும் பாசறையின் மங்காத முழக்கம். அவர் வரலாறாகி வழிகாட்டுவார்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.
அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, கவிஞர் வைரமுத்து நிருபர்களிடம் கூறியதாவது:-
திராவிட இயக்க பெருந்தலைவர்களில் பேராசிரியரைபோல நிறைவாழ்வு வாழ்ந்த மனிதர், யாரும் இல்லை என்றே சொல்லலாம். 97 ஆண்டு காலம் நெடுவாழ்வு, 78 ஆண்டுகாலம் பொதுவாழ்வு, 43 ஆண்டுகாலம் தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்ற பெரும் பொறுப்பு. மறைந்த தலைவர் கருணாநிதியோடு 75 ஆண்டுகள் நட்பு. இப்படிப்பட்ட வாழ்க்கை வேறு எவருக்கும் வாய்த்திருக்காது.
அவர் ஒரே கட்சியில் இருந்தவர். அசையாதவர், தடம் மாறாதவர், தடுமாறாதவர் என்று அவரை சொல்வார்கள். கருணாநிதி ஒரு முறை சொன்னார், ‘அவர் உருவாக்கிய கட்சி, அவரால் ஏற்படுத்தப்பட்ட இயக்கம். அதைவிட்டு அவர் எங்கே நகருவார்’ என்று பேராசிரியரின் பெருமைக்கு பெருமை சேர்த்தார். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், அரசியல் ஆசானை இழந்துவாடும் மு.க.ஸ்டாலினுக்கும், பொதுச்செயலாளரை இழந்துவாடும் தி.மு.க.வினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரிஅனந்தன், புதிய நீதிக்கட்சி நிறுவனத் தலைவர் ஏ.சி.சண்முகம், சு.திருநாவுக்கரசர் எம்.பி., பாரிவேந்தர் எம்.பி., கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், சமத்துவ மக்கள் கழக தலைவர் ஏ.நாராயணன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனத் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ., எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ.மணியரசன்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எம்.பி., தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், தமிழ்க் கவிஞர் பெருமன்ற பொதுச்செயலாளர் பொன்னடியார், முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அகமது, அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர் பா.இசக்கிமுத்து ஆகியோரும் பேராசிரியர் க.அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Related Tags :
Next Story