“மகனையும் ராணுவ வீரராக்க ஆசைப்பட்டார்” வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி மனைவி உருக்கம்


“மகனையும் ராணுவ வீரராக்க ஆசைப்பட்டார்” வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் ராணுவ வீரர் பழனி மனைவி உருக்கம்
x
தினத்தந்தி 16 Jun 2020 11:30 PM GMT (Updated: 16 Jun 2020 8:33 PM GMT)

“மகனையும் ராணுவ வீரராக்க தனது கணவர் ஆசைப்பட்டார்” என வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் மனைவி உருக்கமாக கூறினார்.

ராமநாதபுரம்,

லடாக் பகுதியில் இந்தியா-சீன எல்லையில் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ அதிகாரி உள்பட 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் ராமநாதபுரம் மாவட்டம் கடுக்கலூர் கிராமத்தை சேர்ந்த பழனியும் ஒருவர் ஆவார்.

இதுகுறித்து அவரது குடும்பத்தினருக்கும், ராஜஸ்தான் மாநிலத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வரும் அவருடைய தம்பி இதயக்கனிக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர், அண்ணனின் உடலை பெறுவதற்காக லடாக் பகுதிக்கு விரைந்தார்.

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி கடந்த 1999-ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்தார். 22 ஆண்டுகள் ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றி துணை ஹவில்தார் அந்தஸ்துக்கு உயர்ந்தார். கடந்த ஏப்ரல் மாதம் விடுமுறையில் வந்த அவர், ராமநாதபுரம் அருகே உள்ள கழுகூரணி கிராமத்தில் உள்ள அவருடைய மாமனார் வீட்டில் குடும்பத்துடன் விடுமுறையை கழித்துள்ளார்.

அவசர அழைப்பு

இந்த நிலையில் இந்திய-சீன எல்லையில் ஏற்பட்ட பதற்றத்தால் கடந்த மாதம் முதல் வாரத்தில் ராணுவ உயர் அதிகாரிகள் அவசரமாக அழைத்ததை தொடர்ந்து உடனடியாக புறப்பட்டு சென்று பணியில் சேர்ந்தார்.

நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த பழனிக்கு வானதிதேவி (35) என்ற மனைவியும், பிரசன்னா (10) என்ற மகனும், திவ்யா (8) என்ற மகளும் உள்ளனர். பழனி உயிரிழந்த செய்தியை கேட்டதும் அவருடைய குடும்பத்தினர் கதறினர். கிராமமே சோகத்தில் மூழ்கியது. பழனியின் உடல் ராணுவ விமானத்தில் திருச்சிக்கு கொண்டு வரப்பட்டு இன்று (புதன்கிழமை) அவரது சொந்த ஊரான கடுக்கலூர் கிராமத்துக்கு எடுத்து வரப்படுகிறது.

மனைவி பேட்டி

இது குறித்து ராணுவ வீரர் பழனியின் மனைவி வானதிதேவி கூறியதாவது:-

எனது கணவரின் இறப்பை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மத்திய-மாநில அரசுகள் அவரது வீர மரணத்தை அங்கீகரித்து கவுரவிக்க வேண்டும். மகனையும் ராணுவ வீரராக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். இதுகுறித்து அவர் என்னிடம் அடிக்கடி கூறுவார். அவர் ஒருவரின் வருமானத்தை நம்பித்தான் குடும்பமே வாழ்ந்து வந்தோம்.

எனது கணவர் இறந்த செய்தி இன்று (அதாவது நேற்று) காலையில் தான் எங்களுக்கு தெரியவந்தது. எம்.காம் பட்டதாரியான நான் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளேன். எனக்கு ஆசிரியர் பணி வழங்கவும், எனது குழந்தைகளின் எதிர்கால கல்விக்கும் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story