தி.மு.க. தலைவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா? - ராஜேந்திர பாலாஜிக்கு, கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கண்டனம்
கொரோனாவில் இருந்து மக்களை காக்க வக்கில்லாமல் தி.மு.க. தலைவர் மீது அவதூறுகளை அள்ளி வீசுவதா? என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, கே.கே.எஸ்.ஆர். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
விருதுநகர் தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கில் பரவி தமிழக மக்களின் அன்றாட வாழ்க்கை சூழலை தலைகீழாக புரட்டிப்போட்டதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் பறித்துக்கொண்டு மக்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் ‘கொரோனா‘ என்னும் நோய்த்தொற்றில் இருந்து தமிழக மக்களை காக்க ஒரு துளியும் வக்கில்லாமல், தி.மு.க. தலைவரை நோக்கி அவதூறுகளை அள்ளி வீச முற்பட்டிருக்கிறார்கள்.
‘ஊரடங்குக்குள் ஊரடங்கு‘ என்ற ‘அரிய கண்டுபிடிப்பால்‘ தமிழகத்தின் தலைநகரை ஏற்கனவே கொரோனாவிற்கான தலைமையிடமாக மாற்றிவிட்டு, இன்றைக்கு தமிழகத்தின் ஏனைய முக்கிய நகரங்களை எல்லாம் ஊரடங்குக்குள் உட்படுத்திவிட்டு தமிழகம் முழுவதும் பரவிவரும் நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில்லாமல் தமிழக அரசு நிற்பது அகில இந்தியாவிலும் சந்தி சிரித்துக்கொண்டு இருக்கின்றது.
புத்தர் வேடம்
இந்த கொரோனா பேரிடர் காலத்தை தங்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பாக கருதி மருத்துவ உபகரணங்கள் வாங்குவதில் இருந்து உள்ளாட்சி அமைப்புகளில் கிருமி நாசினி தெளிப்பது வரை ஊழல் செய்து கொண்டு இருப்பவர்கள் இன்னும் சில மாதங்களில் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு, தாங்கள் செய்த தவறுகளுக்கு தண்டனை பெறப்போவது உறுதி.
காவிரி டெல்டா வேளாண் மண்டல பாதுகாப்புக்கு சட்டம் கொண்டு வருவதாக பம்மாத்து செய்து, புழக்கடை வழியே பெட்ரோகெமிக்கல் நிறுவனங்களும், விளை நிலங்களில் குழாய் பதிக்கும் கம்பெனிகளும் உள்ளே நுழைய வழிவகுத்து, விவசாயிகளை வஞ்சித்ததோடு, காவிரி மேலாண்மை ஆணையம் தனக்கான தன்னாட்சி நிலை இழந்து மத்திய நீர்வளத்துறையின் கீழ் ஒன்றாக ஒடுங்கி போகும்போது கூட உள்ளம் துடிக்காது மத்திய அரசுக்கு நடுங்கி போய் வாய்மூடி மவுனியாக டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு துரோகமிழைத்தார்கள். அவர்கள் இன்றைக்கு குடிமராமத்து என்ற பெயரில் அடிக்கும் கொள்ளையை மறைப்பதற்கு புனித புத்தர் வேடம் போட்டு அறிக்கைவிட்டாலும், ஊழல் சகதியில் எந்நாளும் உழன்று கொண்டிருப்பவர்கள் இவர்கள் தான் என்பதையும், அதில் முன்னணி இடம் வகிப்பவர் ராஜேந்திர பாலாஜிதான் என்பதையும் உலகறியும்.
முழுப்பூசணிக்காயை...
வருமானம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கொரோனா ஊரடங்கின் நடுவில் டாஸ்மாக் கடைகளை லாபநோக்கிற்காக திறந்துவிட்டு ஊரெல்லாம் தொற்று பரவக் காரணமாக இருந்தவர்கள் யார் என்பதை எல்லாம் முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மறைக்க ராஜேந்திர பாலாஜி முயற்சி செய்தாலும் அவரது கொண்டை வெளியே தெரியாமல் இல்லை.
எதிர்கட்சித்தலைவர் விடுக்கும் ஆக்கப்பூர்வமான யோசனைகளை கேட்க அனைத்து கட்சிக்கூட்டத்தைக் கூட கூட்டமுடியாது என்று கூறிய இறுமாப்பு இன்னும் குறையாமல் அறிக்கை எனும் பெயரில் அக்கப்போர் செய்யாமல் எஞ்சியிருக்கும் நாட்களிலாவது தமிழக மக்களை துயரக்கடலில் தள்ளிவிடாமல் ஆட்சி நடத்த தமிழக அரசு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story