நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்


நெய்வேலி அனல் மின்நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் 6 தொழிலாளர்கள் உடல் கருகி பலி; 17 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 July 2020 5:45 AM IST (Updated: 2 July 2020 1:05 AM IST)
t-max-icont-min-icon

நெய்வேலி அனல் மின் நிலையத்தில் கொதிகலன் வெடித்ததில் தொழிலாளர்கள் 6 பேர் உடல் கருகி பலி ஆனார்கள். மேலும் படுகாயம் அடைந்த 17 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ளது பொதுத்துறை நிறுவனமான ‘நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன்‘ (என்.எல்.சி.). இங்குள்ள 3 சுரங்கங்களில் இருந்து பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு, அதன் மூலம் 5 அனல் மின்நிலையங்களில் மணிக்கு 3,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கு 8 ஆயிரம் நிரந்தர தொழிலாளர்கள், 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்கள், 4,500 பொறியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இதில் 2-வது அனல் மின்நிலையம் 1,470 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்டது. மின் உற்பத்தி செய்வதற்கு 7 அலகுகள் உள்ளன. ஒரு அலகிற்கு 210 மெகாவாட் என்கிற அளவில் மின்உற்பத்தி நடைபெறுகிறது.

இந்த அனல் மின்நிலையத்தில் உள்ள 6-வது அலகில் கடந்த மே மாதம் 7-ந் தேதி கொதிகலன் வெடித்ததில் 2 நிரந்தர தொழிலாளர்கள், 3 ஒப்பந்த தொழிலாளர்கள் என்று 5 பேர் உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் நடைபெற்று, 2 மாதங்கள் கூட முழுமையடையாத நிலையில் நேற்று அங்கு மீண்டும் ஒரு பயங்கர விபத்து நடந்து, 7 பேரின் உயிரை பலிவாங்கி இருக்கிறது.

இந்த விபத்து பற்றிய விவரம் வருமாறு:-

2-வது அனல் மின்நிலையத்தில் நேற்று காலை வழக்கம் போல் முதற்கட்ட பணி தொடங்கியது. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். காலை 8 மணிக்கு 5-வது அலகின் கொதிகலன் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதனால், அதன் அருகே பணியில் இருந்த தொழிலாளர்கள் தூக்கி வீசப்பட்டனர். சற்று தூரத்தில் பணியில் இருந்த தொழிலாளர்கள் அலறி அடித்துக்கொண்டு கட்டிடத்தை விட்டு வெளியே ஓடினர்.

கொதிகலன் வெடித்து தீப்பிடித்ததால் அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. தகவல் அறிந்த மத்திய தொழிலக தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் தீ கட்டுக்குள் வரவில்லை. இதனால் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மதியம் 12 மணிக்கு பின்னர் இறந்தவர்களின் உடல்களை ஒவ்வொன்றாக தீயணைப்பு வீரர்கள் மீட்டு கொண்டு வந்தனர். இதன் மூலம் சம்பவ இடத்திலேயே 6 பேர் பலியாகி இருப்பது தெரியவந்தது. உடல்கள் முழுவதும் கருகி உருக்குலைந்து காணப்பட்டதால், பலியானவர்களை அடையாளம் காண்பதில் முதலில் சிக்கல் ஏற்பட்டது. அதன் பின்னரே அவர்கள் யார்? என்பது குறித்து தெரியவந்தது.

பலியானவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

1. சிலம்பரசன், நெய்வேலி அருகே உள்ள காப்பான்குளம்.

2. பத்மநாபன், மேலக்குப்பம்.

3. அருண்குமார், கொள்ளிருப்பு.

4. ராமநாதன், ஆத்திரிக் குப்பம்.

5. நாகராஜ், நெய்வேலி.

6. வெங்கடேசபெருமாள், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கள்ளமேடு கிராமம்.

மேலும் இந்த பயங்கர விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 17 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த விபத்தை தொடர்ந்து, பலியானவர்களின் குடும்பத்தினர், அனல்மின்நிலையத்தின் முன்பு திரண்டு, இறந்தவர்களின் உடலை எடுத்து செல்லக்கூடாது என்று கூறி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டதால் போலீசாரும், மத்திய பாதுகாப்பு படை போலீசாரும் குவிக்கப்பட்டனர்.

சமரச பேச்சை தொடர்ந்து 6 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து பற்றி அறிந்ததும் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நெய்வேலிக்கு விரைந்து சென்று அனல்மின்நிலையத்தில் விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் விபத்து குறித்து கேட்டறிந்தார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் கூறினார். அவருடன் நேற்று புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சகமுரியும் சென்று இருந்தார்.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைச்செல்வன் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கணேசன், சபா.ராஜேந்திரன், துரை.கி.சரவணன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

இந்த விபத்தை தொடர்ந்து 2-வது அனல் மின் நிலையத்தின் தலைமை அதிகாரி கோதண்டம் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார். மேலும் 2-வது அனல் மின்நிலையத்தில் உள்ள 4, 5, 6 மற்றும் 7-வது அலகுகள் முழு பாதுகாப்பு தணிக்கைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் உரிய வேலைவாய்ப்பு வழங்குவது தொடர்பாக நெய்வேலி இல்லத்தில் என்.எல்.சி. நிறுவன தலைவர் ராக்கேஷ்குமார் மற்றும் இயக்குனர்களுடன் தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

Next Story