போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரம்-காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்


போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரம்-காவலர்கள் இருவர் சஸ்பெண்ட்
x
தினத்தந்தி 16 July 2020 12:30 PM GMT (Updated: 16 July 2020 12:30 PM GMT)

போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ராஜா தப்பி ஓடிய விவகாரத்தில் காவலர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக போலீசார் குற்றவாளி ராஜாவை வாகனத்தில் அழைத்து வந்தனர். அப்போது மருத்துவமனையில் போலீசாரின் பிடியில் இருந்த ராஜா, திடீரென தப்பி ஓடினார். இதையடுத்து அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

அவர் தப்பி ஓடிய வனப்பகுதியில் ஏராளமான போலீசார் முகாமிட்டு அவரை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மூன்று ட்ரோன் கேமராக்கள் மூலம் தப்பிய இளைஞர் ராஜாவை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தப்பி ஓடிய கைதியை கண்டுபிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதால் விரைவில் கைதி கைது செய்யப்படுவார் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கைதி ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற  காவலர்கள் முருகையன் மற்றும் கோபாலகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்  பிறப்பித்துள்ளார்.


Next Story