சினிமா படப்பிடிப்பில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு


சினிமா படப்பிடிப்பில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் தமிழக அரசு வெளியீடு
x
தினத்தந்தி 31 Aug 2020 11:59 PM GMT (Updated: 31 Aug 2020 11:59 PM GMT)

தமிழகத்தில் சினிமா, தொலைக்காட்சி தொடர் படப்பிடிப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இதுகுறித்து தமிழக தலைமைச்செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சினிமா படப்பிடிப்பு, தொலைக்காட்சி தொடர், இணையதள தொடர் போன்ற அனைத்து வித ஊடக தயாரிப்பின் போது கொரோனா பரவல் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆணையாக அரசு வெளியிடுகிறது.

கட்டுப்பாட்டு பகுதிக்குள் எந்தவித ஊடக தயாரிப்பு நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை. அனைத்து கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களையும் அனைத்து ஊடக தயாரிப்பு யூனிட்கள் பின்பற்ற வேண்டும்.

ஒரு பகுதியில் ஒரு நேரத்தில் மேற்கொள்ளப்படும் சினிமா படப்பிடிப்புக்கு 75 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை. கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள பணியாளர் யாரும் ஊடக தயாரிப்பு பணிக்கு வரக்கூடாது.

வயதானவர்கள், கர்ப்பிணிகள், மருத்துவ சிகிச்சையில் உள்ளவர்கள் போன்ற பணியாளர்கள் பொதுமக்களுடன் நேரடியாக தொடர்புக்கு வராத அளவில் முன்களமற்ற இடங்களில் பணியாற்ற வேண்டும்.

அனைவரும் முக கவசத்துடன் இருக்க வேண்டும். இருமல், தும்மலின் போது கண்டிப்பாக கைக்குட்டைகளை பயன்படுத்த வேண்டும். கை கழுவுதல், சானிடைசரை பயன்படுத்துவது போன்றவற்றை தொடர்ந்து செய்ய வேண்டும்.

அனைத்து பணி தளங்களின் நுழைவு வாயில்களிலும் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். அங்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அறிகுறிகள் இல்லாதவர்களை மட்டும் அனுமதிக்க வேண்டும். அனைவருமே ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொருவரும் 6 அடி இடைவெளியை பராமரிக்க வேண்டும். கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

லிப்ட்களில் ஏறிச் செல்வோரின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும். பணித் தளம், கழிவறை, சிற்றுண்டி பகுதி, செட்கள், எடிட் அறை, வேனிட்டி வேன் போன்றவற்றை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

உபயோகப்படுத்தப்பட்ட முக கவசம், கையுறை, துண்டுகளை அப்புறப்படுத்த வேண்டுமானால், மூடப்பட்ட குப்பைத் தொட்டியில் போட வேண்டும்.

ஏசி குளிரை 24 முதல் 30 டிகிரிவரை வைத்துக்கொள்ளலாம். ஈரப்பதம் 40 முதல் 70 சதவீதம் வரை இருக்கலாம். 50 சதவீதத்துக்கு மேல் வெளிக்காற்று வரும் வகையில் பணித்தளம் இருக்க வேண்டும்.

யாருக்காவது தொற்று ஏற்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்தால் அவரை தனிமைப்படுத்தும் வசதி இருக்க வேண்டும். அதுபற்றி உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். யாருக்காவது கொரோனா தொற்று உறுதியாகத் தெரிந்தால், அந்த வளாகம் முழுவதையும் கிருமிநாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.

கேமரா வைக்கும் இடம், உணவு பரிமாறும் இடம், காட்சிகள் எடுக்கும் இடம், இருக்கைகள் போடும் இடம் ஆகிய ஒவ்வொரு இடத்திலும் சமூக இடைவெளி விடுவதற்கான மேலாண்மையுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். பார்வையாளர்களுக்கு இருக்கைகள் தரக்கூடாது.

படப்பிடிப்பின் போது நடிகர்கள், படப்பிடிப்பில் ஈடுபடுவோர் குறைந்த எண்ணிக்கையில் இருக்க வேண்டும். ஸ்டூடியோக்களில் வெவ்வேறு யூனிட்களுக்கு வெவ்வேறு நேரத்தில் படப்பிடிப்பு, பேக்-அப் அறிவிக்கப்பட வேண்டும். கேமரா முன் நிற்கும்போது நடிப்பவர்கள் தவிர மற்றவர்கள் முக கவசம் அணிய வேண்டும்.

விக் உள்ளிட்ட அழகு சாதன பொருட்களை பரிமாறிக்கொள்வதை குறைக்க வேண்டும். மேக்-அப் கலைஞர்கள், முடி திருத்துவோர் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.

படப்பிடிப்பு குழுவினரில் ஒருவரை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான மேற்பார்வையாளராக நியமிக்க வேண்டும். அவர், படப்பிடிப்பு நடைபெறும் இடம் கட்டுப்பாட்டு பகுதிக்குள் வருகிறதா என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.

ஆரோக்கிய சேது செயலியை செல்போனில் அனைவரும் பதிவிறக்கம் செய்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நடிகர், படப்பிடிப்பு குழுவினருக்கும் உள்ள மருத்துவ பதிவுகளையும், பயண விவரங்களையும் குறித்து வைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story