கூட்டம் கூட்டியதற்காக வழக்குபோட்டால் தமிழ்நாட்டில் அனைவர் மீதும் வழக்குபோட வேண்டியது இருக்கும் எல்.முருகன் பேட்டி


கூட்டம் கூட்டியதற்காக வழக்குபோட்டால் தமிழ்நாட்டில் அனைவர் மீதும் வழக்குபோட வேண்டியது இருக்கும் எல்.முருகன் பேட்டி
x
தினத்தந்தி 20 Sept 2020 4:57 AM IST (Updated: 20 Sept 2020 4:57 AM IST)
t-max-icont-min-icon

கூட்டம் கூட்டியதற்காக வழக்கு போடுவதாக இருந்தால், தமிழ்நாட்டில் அனைவர் மீதும் வழக்குபோட வேண்டியது இருக்கும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை பாடியில், பிரதமர் நரேந்திரமோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனை வைத்திருந்தனர். அப்போது பட்டாசு வெடித்ததில் சிதறிய நெருப்பு துகள்கள் பலூனில் பட்டதும் திடீரென்று பலூன் வெடித்து சிதறியது.

பலூன் வெடித்ததில் நெருப்பு பிழம்பு, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் மீது விழுந்தது. அதில் விவசாய அணி துணைத்தலைவர் முத்துராமன் உள்பட 11 பேருக்கு காயம் ஏற்பட்டது. தீக்காயம் ஏற்பட்டவர்கள் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களை பா.ஜ.க. மாநில தலைவர் எல்.முருகன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதனைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜ.க. சார்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் துரதிர்ஷ்டவசமாக அசம்பாவித சம்பவம் நடந்துவிட்டது. அதில் காயம் அடைந்தவர்களில் பலர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவிட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தமிழக பா.ஜ.க. சார்பில் செய்யப்படும்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட விவசாயம் தொடர்பான 3 சட்டங்கள் குறித்து பா.ஜ.க. சார்பில் அனைத்து முக்கிய விவசாய சங்க பிரதிநிதிகளை அழைத்து ‘வெபினார்’ (ஆன்லைன்) மூலம் பேசஇருக்கிறோம். இந்த சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு என்ன நன்மைகள் இருக்கிறது? என்பது பற்றி எடுத்துக்கூறுவோம். மத்திய பா.ஜ.க. நிர்வாகிகளும் அதில் கலந்துகொள்வார்கள்.

கூட்டத்தை கூட்டியதற்காக வழக்குப்போடுவதாக இருந்தால், தமிழ்நாட்டில் அனைவர்மீதும் வழக்குபோட வேண்டியது இருக்கும். அவ்வளவு பேர் மீது வழக்குபோட முடியுமா?

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story