சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்து வருகிறது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னையில் சென்ட்ரல், எண்ணூர், எழும்பூர், சிந்தாரிப்பேட்டை, ராயபுரம், திருவல்லிக்கேணி, கோயம்பேடு, வடபழனி, கோடம்பாக்கம், தி.நகர். சைதாப்பேட்டை, கிண்டி புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், ஆலந்தூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகள் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள புறநகர் பகுதிகளில் காலை முதல் மழை பெய்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். இதனால் பணிக்கு செல்வோர், இதர வேலை நிமித்தமாக செல்வோர் என கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story