தமிழகத்தில் 4 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

குமரி கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இன்று (சனிக்கிழமை) முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் (அக்டோபர்) 28-ந் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கியதில் இருந்து வட மாவட்டங்களில் ஓரளவுக்கு மழை பெய்தது. அதேபோல், தென் மாவட்டங்களிலும் கடந்த 11-ந் தேதி முதல் ஆங்காங்கே மழை பெய்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
குமரி கடல் பகுதியில் கீழடுக்கு சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இதன் காரணமாக 14-ந் தேதி (இன்று) முதல் வருகிற 17-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வரை (4 நாட்களுக்கு) பெரும்பாலான இடங்களில் மழை பெய்யக்கூடும். 14-ந் தேதியை பொறுத்தவரையில் நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், 15-ந் தேதி (நாளை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story