அத்தியாவசிய பணியாளர்களுக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரெயில் சேவை - ரெயில்வே அதிகாரி தகவல்

அத்தியாவசிய பணியாளர்களுக்காக இன்று முதல் கூடுதலாக 86 மின்சார ரெயில் சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் ஊழியர்கள், பெண்கள், குழந்தைகளுக்காக மின்சார ரெயில்களும் சென்னையில் இயக்கப்படுகிறது.
அந்தவகையில் முதற்கட்டாமாக 40 மின்சார ரெயில் சேவையில் இருந்து 120-ஆக அதிகரிக்கப்பட்டது. பின்னர் சில நாட்களுக்கு பிறகு கூடுதலாக 30 மின்சார ரெயில் சேவை அதிகரிக்கப்பட்டு, 150 சேவைகள் இயக்கப்பட்டது. இதையடுத்து, பெண்கள், குழந்தைகளும் மின்சார ரெயிலில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் மின்சார ரெயில் சேவை 320-ஆக மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், கூட்ட நெரிசலை தவிர்க்கவும், தொற்று பரவலை தடுக்கவும், சென்னையில் மீண்டும் மின்சார ரெயில் சேவை இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்கப்படுகிறது. இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சென்னையில் ஏற்கனவே 320 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பயணிகளின் வசதிக்காக கூட்ட நெரிசல் இல்லாமல் செல்வதற்காக தற்போது மேலும் கூடுதலாக 86 சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று முதல் சென்னையில் 406 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்படும். விரைவில் வழக்கமான ரெயில் சேவை தொடங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story