ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலி: வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தீவிர கண்காணிப்பு

ஒமைக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.
கோவை,
கொரோனா வைரஸ் உருமாறி ஒமைக்ரான் என்ற பெயரில் அதி தீவிரமாக பரவி வருகிறது. இந்த புதிய வகை வைரஸ் ஆனது தென் ஆப்பிரிக்காவில் தோன்றி பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. இந்த புதிய வைரஸ் பாதித்த நாடுகளில் இருந்து கோவைக்கு கடந்த ஒரு மாதத்தில் 17 பேர் வந்து உள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:-
வெளிநாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேரும் புதிய வைரஸ் கண்டறிவதற்கு முன்பே அதாவது கடந்த மாதம் 24-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள். இருப்பினும் தற்போது உருமாறிய வைரஸ் பரவல் குறித்து தெரியவந்ததால் அந்த நாடுகளில் இருந்து கோவை வந்த 17 பேரும் அடையாளம் காணப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவர்களில் யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை. இருந்த போதிலும் 17 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகிறர்கள்.
மேலும் அவர்களுக்கு புதிய வகை தொற்று அறிகுறி உள்ளதா என்பது குறித்தும் சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர். அவர்களுக்கு 7 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் 14 நாட்கள் வரை அவர்கள் தனிமைப்படுத்த அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் அனைவரும் சுகாதாரத்துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள் என்றார்.
Related Tags :
Next Story