சரக்கு ஆட்டோவுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


சரக்கு ஆட்டோவுடன்  3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 18 Dec 2021 10:02 PM IST (Updated: 18 Dec 2021 10:02 PM IST)
t-max-icont-min-icon

சரக்கு ஆட்டோவுடன் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வீரபாண்டி :
திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்திய வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி பிடித்த பொதுமக்களை கடத்தல்காரர்கள் பட்டாக்கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரேஷன் அரிசி 
திருப்பூர் முருகம்பாளையம் செல்லம் நகர் பகுதியில் அதிகளவில் ரேஷன் அரிசியை கடத்தி, அதனை பதுக்கி விற்பனை செய்து வருவதாக  உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் நேற்றுமாலை  செல்லம் நகர் பகுதியில் ஒரு சரக்கு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தி செல்வதாக தகவல் பரவியது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்லம் நகர் பிரிவில் மூட்டைகளை ஏற்றி சென்ற ஆட்டோவை பார்த்தனர். அந்த மூட்டைகள் ரேஷன் அரிசியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஆட்டோவை நிறுத்தினர். பின்னர் ஆட்டோ டிரைவரிடம் மூட்டைகளில் இருப்பது என்ன என்று கேட்டனர். ஆனால் அவர் தகவல் சொல்ல மறுத்து விட்டதால் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதில் இருந்த மூட்டைகளை பிரித்து பார்த்தபோது அவை அனைத்தும் ரேஷன் அரிசி என்றும், அவை கடத்தி செல்லப்படுவதும் தெரியவந்தது.
தாக்குதல்
இது குறித்து உடனே  உணவு தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கும், வீரபாண்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் திடீரென்று பட்டாகத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் பொதுமக்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள்  3 பேர் படுகாயம் மடைந்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்த்  தப்பிச்சென்றவர்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டார். மேலும் அப்பகுதியில் கிடந்த பட்டாக் கத்தியை கைப்பற்றினார். பின்னர் பறக்கும்படை தனி தாசில்தார் சுந்தரம், தனி வருவாய் ஆய்வாளர் ராஜா மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். 
போலீஸ் விசாரணை
ரேஷன் அரிசி எங்கிருந்து கொண்டு வரப்பட்டது ? எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளது? என்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் ஆட்டோவில் இருந்த 3 டன் ரேஷன் அரிசியுடன் சரக்கு ஆட்டோவை பறிமுதல் செய்து எடுத்துச்சென்றனர். மேற்கொண்டு இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
 இச்சம்பவம் குறித்து வீரபாண்டி போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேஷன் அரிசியை கடத்திச் சென்ற கடத்தல்காரர்களை தடுத்து நிறுத்திய பொதுமக்களை பட்டாக்கத்தியால் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story