தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: தேவாலயங்கள் களைகட்டியது


தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்: தேவாலயங்கள் களைகட்டியது
x
தினத்தந்தி 25 Dec 2021 1:25 PM IST (Updated: 25 Dec 2021 1:25 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை

உலகம் முழுவதும் இன்று (டிசம்பர் 25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கிறிஸ்துமஸ் பண்டிகை களைகட்டியுள்ளது.

கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைகளில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தென்னகத்து வேளாங்கண்ணி என்று போற்றப்படும் புகழ்வாய்ந்த வாடிப்பட்டி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் கிறிஸ்துமஸ் தினவிழா நடந்தது. இந்த விழாவையொட்டி திருத்தல வளாகத்தில் ஏசுபிறப்பு பற்றிய வண்ண விளக்குகள், மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குடில் அமைக்கப்பட்டிருந்தது. 

இரவு 11.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இந்த சிறப்பு திருப்பலியில் பங்குதந்தை ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினார். இதில் அதிபர் நிர்வாகி அந்தோனி ஜோசப், உதவி பங்கு தந்தை குழந்தை யேசுதாஸ்,  மற்றும் இருபால் துறவியர் அன்பியங்கள் பங்கு மக்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்த சிறப்பு திருப்பலி முடிந்தபின் இரவு 12 மணிக்கு ஏசு பிறப்பினை விளக்கும்வகையில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசு உருவத்திற்கு சிறப்பு ஆராதனை நடந்தது. இதில் சமூகஇடைவெளியை கடைபிடித்து முககவசம்அணிந்து பக்தர்கள் கலந்துகொண்டனர்.  

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்மஸ் விழா கொண்டாடப்பட்டது. 

கிறிஸ்தவர்களுடைய ஏற்பாட்டின்படி மற்றும் அதிக கூட்டம் வரும் என்பதால் இந்த பகுதி முழுவதும் இரவு 12 மணிக்கு கிறிஸ்து பிறப்பை அறிவிக்கின்ற வகையில் நடத்தப்படும் இந்த விழாவிற்கு என்று அதற்கு பதிலாக எல்லா பகுதியிலும் இன்று காலை 8 மணிக்கு தேவாலயங்களில் கிறிஸ்மஸ் விழா கூட்டங்கள் நடைபெற்றது.

சத்தியமங்கலத்தில் பாதிரியார் மரிய ஜோசப் முன்னின்று பூசைகள் செய்தார் இந்த அருளானந்தர் ஆலயத்தில் கிறிஸ்து பிறப்பை அறிவிக்கும் வகையில் கோயில் உள் பகுதியில் குடில் அமைத்து மின்சார விளக்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. காலை 8 மணிக்கு நடந்த பூஜையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டார்கள். 

இது போல வடவள்ளியில் உள்ள வேளாங்கண்ணி ஆலயத்தில் இன்று காலை 9 மணிக்கு பாதிரியார் மரிய பீட்டர் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது இங்கு சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள்  ஏராளமான பேர் கலந்து கொண்டார்கள்.

இதுபோல சத்தியமங்கலம் அருகில் உள்ள கொடிவேரியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் அந்தோணிராஜ் பாதிரியார்கள் பூஜை நடத்தினார்கள். சிக்கரசம்பாளையம் பிரான்சிஸ் சேவியர். கொங்கர் பாளையத்தில் ஆரோக்கியராஜ் பாதிரியார் தலைமையில் கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வேலூர் விண்ணேற்பு அன்னை பேராலயத்தில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது. அதனை தொடர்ந்து ஏசு பிறந்ததை குறிக்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை ஏசு சொரூபத்தை ஆயர் காட்டினார். பின்னர் ஆலய வளாகத்தில் உள்ள குடிலில் சொரூபம் வைக்கப்பட்டது. இதில் ஆயர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

புதுவை மிஷின் வீதியில் ஜென்மராக்கினி ஆலயத்தில் கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

தென்னிந்திய திருச்சபை சார்பில் முருகன்குறிச்சியில் உள்ள தூய திரித்துவ பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை சனிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. கிறிஸ்துமஸ் தேவ செய்திக்கு பின்பு, திருவிருந்து உபசரணை நடைபெற்றது. பிரார்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன.

இதேபோல பாளையங்கோட்டை சீவலப்பேரி சாலையில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயம், மேலப்பாளையத்தில் உள்ள தூய அந்திரேயா தேவாலயம், டக்கரம்மாள்புரத்தில் உள்ள தூய மீட்பரின் ஆலயம், சாந்திநகரில் உள்ள குழந்தையேசு தேவாலயம், உடையார்பட்டியில் உள்ள இயேசுவின் திரு இருதய ஆலயம், திருநெல்வேலி நகரத்தில் உள்ள அடைக்கல அன்னை தேவாலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியார் தேவாலயம் ஆகியவற்றிலும் கிறிஸ்துமஸ் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன.

மேலப்பாளையம் சேவியர்காலனியில் உள்ள தூய பேதுரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் மரவிழா மற்றும் ஞாயிறு பள்ளி மாணவர்-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் வரவேற்றார். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மரவிழா பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி திருச்சி மேலப்புதூர் தூய மரியன்னைப் பேராலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. மறை மாவட்ட பங்குத் தந்தை ஆரோக்கியராஜ் பிரார்த்தனை நடத்தினார் திரளான கிறிஸ்துவ மக்கள் இதில் கலந்துகொண்டனர். 

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் வெள்ளிக்கிழமை இரவு  நடைபெற்றன.

வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில், கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு வழிபாடுகள் நேற்று இரவு 11.30 மணி அளவில் தொடங்கி நடைபெற்றன. மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் தொடங்கப்பட்டன. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டன.

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலய அதிபர் சி. இருதயராஜ் அடிகளார், பேராலய துணை அதிபர் அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன் மற்றும் உதவி பங்குத் தந்தையர்கள் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே, நூறாண்டு பழமையான பத்தாம் பத்திநாதர் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களின் தேவாலயம் அமைந்துள்ளது.

இந்த தேவாலயத்தின் பங்குத்தந்தையான அ.சிங்கராயன், இரு ஆண்டாக கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, அனைத்து தரப்பு மக்களையும் ஈர்க்கும் வகையில், புதுமையான கிறிஸ்துமஸ் குடில் அமைத்து வருகிறார்.

நிகழாண்டு பத்தாம் பத்திநாதர் கோவில் வளாகத்தில் மரியன்னை, குழந்தை இயேசு கிறிஸ்துவின் பிறப்பை சித்தரிக்கும் காட்சிகளுடன், புனிதபோப் ஆண்டவர் மற்றும் தேசிய அளவில் மனிதநேயத்தோடு சேவையாற்றி வரும் நல்ல மனிதர்களைப் பாராட்டும் வகையில், இவர்களை  சித்தரிக்கும் ஒளிப்பட காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, சென்னையில்  மழை, வெள்ள விபத்தில் சிக்கிய மனநலம் பாதித்தவரை தோளில் சுமந்து சென்று காப்பாற்றிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்  ராஜஸ்வரி, தஞ்சாவூரில் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக மலையைக் குடைந்து சாலை அமைத்த தசரத் மான்ஜி, 30 ஆண்டுகள் உழைத்து கால்வாய் அமைத்து மழைநீரை கிராமத்திற்கு  கொண்டு வந்து நீர்தேக்கம் அமைத்த முதியவர் லாயுங்கி புய்யான் ஆகியோரது ஒளிப்படங்களும், இவர்களின் மனித நேயமிக்க சாதனைகள் பற்றிய குறிப்புகளும் இந்த குடில்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கதாகும்.



 

மத நல்லிணக்கத்திற்கு இலக்கணமாகத் திகழும் இக்குடில் குறித்து தகவலறிந்த வாழப்பாடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த மக்கள், மத வேறுபாடின்றி வந்து கண்டு களித்துச் செல்கின்றனர். 


Next Story