கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்


கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் தங்கம் கடத்தல்
x
தினத்தந்தி 30 Dec 2021 10:08 AM IST (Updated: 30 Dec 2021 10:08 AM IST)
t-max-icont-min-icon

சார்ஜாவில் இருந்து கோவை வந்த விமானத்தில் நூதன முறையில் ரூ.1.10 கோடி தங்கம் கடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.







கோவை,

கோவையில் உள்ள விமான நிலையத்துக்கு சார்ஜாவுக்கும், உள்நாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான விமானங்கள் வந்து செல்கின்றன. இந்த விமானங்கள் மூலம் வரும் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து தங்கம் உள்பட பல்வேறு பொருட்கள் கடத்தி வருகிறார்களா? என்பது குறித்து மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சார்ஜாவில் இருந்து கோவைக்கு வரும் அரேபிய நாட்டுக்கு சொந்தமான ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  இதனால், அந்த அதிகாரிகள் அனைவரும் உஷார்படுத்தப்பட்டனர்.

அதன்படி சார்ஜாவில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் இருந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது 4 பயணிகளின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டது. உடனே அதிகாரிகள் அந்த பயணிகளை பிடித்து, தனியாக அழைத்து சென்று அவர்கள் கொண்டு வந்த பைகளில் இருந்த அனைத்து பொருட்களையும் சோதனை செய்தனர்.

அதில் யாருக்கும் தெரியாதவாறு உள் ஆடைகளின் உள்பகுதியிலும், ஆசனவாய் பகுதிக்குள்ளும் நூதன முறையில் கடத்தி வந்தது தெரியவந்தது.  அவர்களிடம் இருந்து 2.2 கிலோ மதிப்பிலான தங்கம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.  அதன் மதிப்பு ரூ.1.10 கோடி ஆகும்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில், ராமநாதபுரம் மாவட்டத்தினை சேர்ந்த சகுபர் சாதிக் செய்யது முகமது, நசாருதீன் முகமது தம்பி, கலில் ரகுமான் முஸ்தபா மற்றும் தஸ்தகீர் காஜா முகைதீன் ஆகியோர் என்பது தெரியவந்தது.  அவர்கள் 4 பேரையும் அதிகாரிகள் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story