‘நீட்’ விலக்கு விவகாரம்: 8-ந் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம்


‘நீட்’ விலக்கு விவகாரம்: 8-ந் தேதி சட்டசபை சிறப்பு கூட்டம்
x
தினத்தந்தி 6 Feb 2022 5:47 AM IST (Updated: 6 Feb 2022 5:47 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ விலக்கு மசோதா விவகாரத்தில், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப் பட்ட முடிவின்படி சட்டசபை சிறப்பு கூட்டம் 8-ந் தேதி நடக்கிறது.

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அனைத்து கட்சி கூட்டம்

ஆனால் சட்டமசோதாவை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி அதை கவர்னர் திருப்பி அனுப்பினார். இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று சென்னை தலைமைச்செயலகத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. சார்பில் அமைச்சர் க.பொன்முடி, காங்கிரஸ் சார்பில் கு.செல்வப்பெருந்தகை, பா.ம.க. சார்பில் எஸ்.பி.வெங்கடேஸ்வரன், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் டி.ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நாகைமாலி, ம.தி.மு.க. சார்பில் ஏ.ஆர்.ரகுராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.சிந்தனைச்செல்வன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன்,தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஜவாஹிருல்லா ஆகியோர் கலந்து கொண்டனர்.

மக்களின் கருத்தொற்றுமை

முதலில் அனைவரையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்று தொடக்க உரை ஆற்றினார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் ‘நீட்’ தேர்வு விலக்கு தொடர்பான வரைவு தீர்மானத்தை முன்மொழிந்தார். அதன் பின்னர் கட்சிகளின் நிர்வாகிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி, ‘நீட்’ தேர்வு விலக்கு கோரி தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தங்களது முழு ஒத்துழைப்பை அளிப்பதாக தெரிவித்தனர்.

பின்னர் இந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

மருத்துவ மாணவர் சேர்க்கையில் ‘நீட்’ தேர்வு முறை, ஏழை, நடுத்தர வகுப்பு மாணவர்களை மிகவும் பாதித்துள்ளது. மாநில அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்கும் உரிமையையும், மாநில அரசுகளிடம் இருந்து பறிப்பதாகவும் அமைந்துள்ளது. சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு தொடர்ந்து செல்லும் வசதி வாய்ப்புகள் பெற்றவர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ள இந்த தேர்வு முறை, பள்ளிக்கல்வியின் அவசியத்தையே சீர்குலைக்கிறது.

இவற்றை கருத்தில்கொண்டு, இந்த தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பள்ளிக்கல்வியில் மாணவர்கள் பெறும் 12-வது வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கைமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மக்களிடையே நிலவி வரும் அசைக்கமுடியாத கருத்தொற்றுமையை மனதில் கொண்டும், மாநில அரசுகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாகவும், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் சட்ட மசோதாவை 13-9-2021 அன்று சட்டசபையில் நிறைவேற்றி, ஜனாதிபதியின் ஒப்புதலைப்பெற, மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பதற்காக கவர்னருக்கு அனுப்பி வைத்தோம்.

கவர்னர் கூறுவது சரியல்ல

இந்த சட்டமசோதாவை மத்திய அரசுக்கு கவர்னர் அனுப்பி வைக்காத நிலையில், அவரை முதல்-அமைச்சர் நேரில் சந்தித்தும், அனைத்து கட்சி எம்.பி.க்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு அளித்தும், மத்திய உள்துறை மந்திரியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். ஆனாலும் 5 மாதங்களாக மத்திய அரசுக்கு அந்த சட்டமசோதா அனுப்பப்படவில்லை.

அதை சட்டமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கூறி சபாநாயகருக்கு கவர்னர் திருப்பி அனுப்பி வைத்துள்ளார். ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா, ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனுக்கு எதிரானது என்றும், இச்சட்டத்திற்கு அடிப்படையான நீதிபதி ஏ.கே.ராஜன் குழு தெரிவித்துள்ள கூற்றுகள் தவறானவை என்றும், கவர்னர் குறிப்பிட்டது சரியல்ல என நடுநிலையாளர்களும், சட்ட வல்லுனர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தீர்மானம்

‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு தேவையற்றது என்ற கவர்னரின் கருத்தை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழை, நடுத்தர மாணவர்களின் நலனை பாதுகாக்கவும், மாநில அரசுகளின் உரிமையை மீட்டெடுக்கவும், ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறுவதே தீர்வாக அமையும் என்ற அடிப்படையில், சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, ‘நீட்’ தேர்வு குறித்து கவர்னர் தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து தெளிவாக விவாதித்து,சரியான வாதங்களைஎடுத்துரைத்து, இந்த சட்டமுன்வடிவை மீண்டும் நிறைவேற்றி, ஜனாதிபதியின்ஒப்புதலைப்பெற மத்தியஅரசுக்கு அனுப்பி வைப்பதற்காக கவர்னருக்கு மீண்டும் அனுப்புவது என்று இந்த கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

முடிவில் அமைச்சர் துரைமுருகன் நிறைவுரை ஆற்றினார்.

8-ந் தேதி சிறப்பு சட்டசபை கூட்டம்

இதற்கிடையே சென்னை தலைமைச்செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு நேற்று மாலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சுகாதாரத்துறை அமைச்சர் சட்டசபை விதி 143-ன் கீழ் சட்டமன்றத்தின் சிறப்பு கூட்டத்தை உடனடியாக கூட்டி ‘நீட்’ சம்பந்தப்பட்ட சட்டமசோதாவை மீண்டும் விவாதித்து ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என்று கடிதம் மூலம் எனது கவனத்திற்கு கொண்டு வந்தார்.

இவற்றை எனது கவனத்தில் கொண்டு, அவர்கள் கூறும் கருத்துகள் அனைத்தும் நியாயமாகவும், மக்கள் நலன் சார்ந்தும் இருப்பதால்,வருகிற 8-ந் தேதி தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்ற பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு சிறப்பு கூட்டத்தை கூட்டுவதென்று தீர்மானித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story