கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கட்சி செய்யாததை திமுக செய்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு


கடந்த 10 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த கட்சி செய்யாததை திமுக செய்திருக்கிறது - மு.க.ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 Feb 2022 8:56 PM IST (Updated: 6 Feb 2022 8:56 PM IST)
t-max-icont-min-icon

கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

சென்னை,

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கட்சியின் தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, “உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி” என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலைச் சந்திக்கிறோம். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும் எதிர்காலத்துக்கும் தி.மு.க. ஆட்சி அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களித்தார்கள்.

ஒரு ஆட்சி என்பது 5 ஆண்டு காலம். அந்த 5 ஆண்டு காலத்துக்குள் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும். இதுதான் நல்லாட்சியின் இலக்கணம். ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டு காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியைத் தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும். அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது தி.மு.க. ஆட்சி நடந்துவருகிறது.

தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளரவேண்டும் - அனைத்துத் துறைகளும் வளரவேண்டும் என்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆட்சி நமது ஆட்சி.தமிழ்நாட்டில் மட்டுமல்ல, மத்திய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும், வாதாடியும் பெறுகிற இயக்கமாக, ஆட்சியாக தி.மு.க. ஆட்சி இருக்கும். 

தமிழ்நாட்டின் ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக 'நீட்' தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரை நாம் இழந்தோம். 'நீட்' தேர்வு என்பது பல லட்சம் கொடுத்துப் பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவர்களுக்குத்தான் வசதியானது. 

ஆதலால் 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும், மறுநாளே அதாவது, நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தினோம். அடுத்ததாக, வரும் 8-ம் நாள்  தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம்.

'நீட்' தேர்வை வைத்து தான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. இதோ இப்போது நாம் துணிச்சலோடு, கவர்னர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். 'நீட்' எதிர்ப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம். 'நீட்' மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்.

விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும் என காணொலி முறையில் பேசினார்.

Next Story