தமிழகத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவீதமாக அதிகரிப்பு - 4-ம் கட்ட ஆய்வில் தகவல்


தமிழகத்தில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவீதமாக அதிகரிப்பு - 4-ம் கட்ட ஆய்வில் தகவல்
x
தினத்தந்தி 9 Feb 2022 1:08 PM IST (Updated: 9 Feb 2022 1:08 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவீதமாக அதிகரித்துள்ளதாக 4ம் கட்ட ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

கொரோனா நோய் பரவல் அச்சுறுத்தி வருகிறது. நோய் தொற்றில் இருந்து பாதுகாக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். அரசின் தீவிர நடவடிக்கை காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறித்து ரத்தம் சார்ந்த தொற்று நோயியல் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

முதல் கட்டமாக கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் செய்யப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு சக்தி 32 சதவீதமாகவும், 2-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 29 சதவீதமாகவும், 3-வது கட்டமாக 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் நோய் எதிர்ப்பு சக்தி 70 சதவீதமாகவும் இருந்தது.

தற்போது 4-வது கட்டமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட ஆய்வில் பொதுமக்களின் நோய் எதிர்ப்பு 87 சதவீதமாக அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு 32,245 பேரிடம் தலா 30 பேர் கொண்ட 1,076 குழுக்களாக பிரிந்து கிராமம், நகர்ப்புற பகுதிகளில் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மாநில பொது சுகாதார ஆய்வகங்களில் பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களின்நோய் எதிர்ப்பு சக்தி 87 சதவீதமாக உள்ளது. 11 முதல் 18 வயதுக்குட்பட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி 68 சதவீதம் இருக்கிறது. ஆனால் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட 27,324 பேரில் நோய் எதிர்ப்பு சக்தி 24,667 பேரிடம் (90 சதவீதம் ஆகும்) இருந்தது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 4,921 பேரில் 3,374 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக (69 சதவீதம்) இருந்தது.

மாவட்டம் வாரியாக நடத்தப்பட்ட இந்த ஆய்வில் திருவாரூர் மாவட்டத்தில் 93 சதவீத பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. சென்னையில் 88 சதவீத பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது.

மற்ற மாவட்டங்களில் உள்ள மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி சதவீதம் வருமாறு:-

தென்காசி-92, பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, கன்னியாகுமரி, விருதுநகர்- 91, கடலூர், நாகப்பட்டினம், திருநெல்வேலி, நாமக்கல், திண்டுக்கல், திருவள்ளூர்-88, நீலகிரி, அரியலூர், தூத்துக்குடி, ஈரோடு-87, தேனி, திருச்சி, திருப்பூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, வேலூர், கரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், செங்கல்பட்டு-86, திருவண்ணாமலை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, கோவை, சேலம்-85, விழுப்புரம், தர்மபுரி-84, காஞ்சிபுரம்-83, திருப்பத்தூர்-82 சதவீதம் ஆகும்.

Next Story