சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் ரூ 60 கோடியில் பாலம் சாலை விரிவாக்க பணி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்


சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் ரூ 60 கோடியில் பாலம்  சாலை விரிவாக்க பணி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 12 Feb 2022 12:29 AM IST (Updated: 12 Feb 2022 12:29 AM IST)
t-max-icont-min-icon

சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் ரூ.60 கோடியில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

வில்லியனூர்
சங்கராபரணி ஆற்றின் குறுக்கே ஆரியபாளையத்தில் ரூ.60 கோடியில் பாலம் மற்றும் சாலை விரிவாக்க பணிகளை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.

ஆரியபாளையம் பாலம்

புதுச்சேரி-விழுப்புரம் சாலையை இணைக்கும் முக்கிய பகுதியாக ஆரியபாளையம் சங்கராபரணி ஆற்றுப் பாலம் திகழ்கிறது. இந்த பாலத்தில் 24 மணி நேரமும் பஸ்கள், லாரிகள், சரக்குவேன்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. 
முக்கியத்துவம் வாய்ந்த இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் மிகுந்த சேதமடைந்து காணப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையின்போது மேம்பாலத்தை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
மேம்பாலம் குறுகியதாக இருப்பதாலும், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாவதாலும் புதிய பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும் எம்.என்.குப்பம் முதல் இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரையில் சாலை அகலப்படுத்தப்படவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டது. அதன்படி மத்திய அரசு இதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்தது.

பூமி பூஜை

இந்த பணிகளுக்கான தொடக்க விழா நேற்று காலை ஆரியபாளையத்தில் உள்ள ஆற்றுப்பாலம் அருகில் நடந்தது. விழாவிற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.சரவணன்குமார், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா, சிவசங்கர் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை செயலாளர் நெடுஞ்செழியன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

வளர்ச்சி பாதை

விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:-
புதுவை மாநிலம் வளர்ச்சிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மக்கள் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள் புதுச்சேரி மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றனர்.
நானும் எந்த விதத்தில் உதவி செய்ய வேண்டுமோ? அதை செய்கிறேன். இந்த அரசு மக்களின் வளர்ச்சி மட்டுமே குறிக்கோளாக செயல்பட்டு வருகிறது. புதுவைக்கு இன்னும் பல்வேறு திட்டங்கள் வர உள்ளது. இதற்கு மத்திய மந்திரிகள் உறுதியாக உள்ளனர். புதுவை மாநிலம் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற உள்ளது. அத்தனை திட்டங்களையும் மத்திய அரசின் உதவியோடு நிறைவேற்றி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

ரங்கசாமி

விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
ஆரியபாளையம் விழுப்புரத்தை இணைக்கும் முக்கியமான பாலமாகும். முன்பு போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தது. மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப தற்போது இங்கு அகலமான பாலம் நமக்கு தேவை. இதுதொடர்பாக மத்திய அரசை அணுகியபோது, 4 வழிச்சாலையாக மாற்ற அனுமதி அளித்துள்ளனர். இந்த பாலம் தரமானதாக 2 ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டும். 
அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் அரசு நிறைவேற்றி வருகிறது. அனைத்து சாலைகளும் விரைவில் மேம்படுத்தப்படும். கோர்க்காடு, ஏம்பலம் சாலை மேம்படுத்தும் பணி விரைவில் நடைபெறும். 
புதுவை உள்கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இதற்கு மத்திய அரசின் நிதியுதவியை கேட்டுள்ளோம். மத்திய அரசும் தேவையான நிதியை ஒதுக்கி வருகிறது. புதுவைக்கு தேவையான திட்டங்களை பெற்றுத்தர கவர்னர் உறுதுணையாக இருந்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்

4 வழிச்சாலை

இந்த திட்டத்தின் படி ரூ.60 கோடி செலவில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 365 மீட்டர் நீளம், 18 மீட்டர் அகலத்தில் 4 வழிச்சாலையாக மேம்பாலம் அமைக்கப்படுகிறது. புதிய பாலத்தின் இருபுறமும் 470 மீட்டர் அணுகுசாலை அமைக்கப்படும். எம்.என்.குப்பம் முதல் மூலக்குளம் வரை சாலையின் நடுவில் தடுப்பு சுவரும் அமைக்கப்பட உள்ளது. நகரின் இருபுறமும் யூ வடிவ வாய்க்கால் அமைக்கப்படுகிறது.
மேலும் வடிகால் வசதிகள் தேவைப்படும் இடங்களில் 12 குறுகிய பாலங்கள், நிழற்குடை, போக்குவரத்து அறிவிப்பு பலகை, சாலையில் வர்ணம் பூசும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. சாலை பணி, குறுகிய பாலம், வாய்க்கால் ஆகியவற்றிக்கு ரூ.44 கோடியே 31 லட்சமும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க ரூ.25 கோடியே 87 லட்சம் என மொத்தம் ரூ.70 கோடியே 18 லட்சத்திற்கு டெண்டர் கோரப்பட்டது. ஒப்பந்த அடிப்படையில் குறைந்தபட்ச தொகையாக ரூ.59 கோடியே 49 லட்சம் கோரிய தகுதி வாய்ந்த ஒப்பந்ததாரருக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்தில் மாற்றம்?

தற்போதுள்ள பாலத்துக்கு கிழக்கு பகுதியில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. இருப்பினும் ஏற்கனவே இருந்து வரும் போக்குவரத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. வழக்கம் போல் அதேவழித்தடத்தில் வாகனங்கள் சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
=======

Next Story