கோவையில் காவலாளி எரித்து கொலை: 2 பேருக்கு வலைவீச்சு


கோவையில் காவலாளி எரித்து கொலை: 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 19 Feb 2022 7:11 PM IST (Updated: 19 Feb 2022 7:11 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் சம்பளம் கேட்டபோது ஏற்பட்ட தகராறில் காவலாளியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை,

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

மதுரை மாவட்டம் தெற்கு மாசி வீதியை சேர்ந்தவர் ரத்தினவேல் (வயது 76). இவர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்தார். இந்நிலையில் தனியார் நிறுவன உரிமையாளர்கள் ரத்தினவேலுக்கு கடந்த 2 மாதங்களாக சம்பளம் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியில் இருந்த அவர் சம்பவத்தன்று தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலிப்குமார் மற்றும் அதிகாரி ஜான் ஆகியோரை தொடர்பு கொண்டு சம்பளம் வழங்கும்படி கூறி உள்ளார். இதையடுத்து அவர்கள் இருவரும், ரத்தினவேலை நவ இந்தியா அருகே வரும்படி கூறியுள்ளனர்.

இதையடுத்து ரத்தினவேலும், அவர்கள் கூறிய இடத்திற்கு  சென்று தனக்கு சம்பளம் உடனடியாக தர வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் இருவரும் வங்கி கணக்கிற்கு சம்பளத்தை அனுப்பி விட்டோம். ஏ.டி.எம். மையம் சென்று சம்பள பணத்தை எடுத்து கொள்ளும்படி கூறினர். ஆனால் அதனை நம்ப மறுத்த ரத்தினவேலு அவர்கள் இருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த திலிப்குமார் மற்றும் ஜான் ஆகிய இருவரும் ரத்தினவேலுவை தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் அவர்கள் இருவரும் ஒரு காரில் ரத்தினவேலை ஏற்றிக்கொண்டு கொடிசியா பகுதிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்த ஒரு கழிப்பறை அருகே ரத்தினவேல் மீது இருவரும் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்ததாக கூறப்படுகிறது. தீ மள,மளவென்று அவரது உடல் முழுவதும் பரவியது. இதனால் அவர் தன்னை காப்பாற்றும் படி கூச்சலிட்டார். இதையடுத்து திலிப்குமார், ஜான் ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

ரத்தினவேலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்தனர். பின்னர் அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திலிப்குமார், ஜான் ஆகியோரை தேடி வருகின்றனர்.

Next Story