சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த போலீஸ்காரர் கைது..!


சப்-இன்ஸ்பெக்டரை அடித்து உதைத்த போலீஸ்காரர் கைது..!
x
தினத்தந்தி 2 March 2022 8:05 PM IST (Updated: 2 March 2022 8:05 PM IST)
t-max-icont-min-icon

மயிலாப்பூர் மகாசிவராத்திரி திருவிழாவின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய காவலர் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா நேற்று நடந்தது. அங்கு ராயப்பேட்டை குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், கபாலீசுவரர் கோவிலில் பக்தர்களை வரிசையில் நிற்கவைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது அங்கு டிப்-டாப் ஆக வந்த வாலிபர் ஒருவர், பொதுமக்களுடன் வரிசையில் நிற்காமல் குறுக்கு வழியாக சென்று சாமி கும்பிட முயன்றார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கண்டித்தார்.

அதற்கு அந்த வாலிபர் ‘நான் போலீஸ்காரன், வரிசையில் நிற்கமுடியாது’என்று கூறினார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் மோதலாக மாறி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை, அந்த வாலிபர் சரமாரியாக அடித்து உதைத்ததாக தெரிகிறது. கோவிலுக்குள் சப்-இன்ஸ்பெக்டர் தாக்கப்படுவதை பார்த்த பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரனை தாக்கிய வாலிபரை பிடித்து காவலுக்கு நின்ற போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அந்த வாலிபர் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டார். அந்த வாலிபர் பெயர் பாலாஜி (வயது 29) என்றும், தமிழ்நாடு சிறப்பு காவல்படை போலீஸ்காரர் என்றும் தெரியவந்தது. மேலும் அவர் சப்-இன்ஸ்பெக்டருடன் மோதலில் ஈடுபட்டபோது போலீஸ் சீருடை அணிந்திருக்கவில்லை. ஆனால் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் போலீஸ் சீருடையில் இருந்தார்.

போலீஸ்காரர் பாலாஜி கைது செய்யப்பட்டார். அவர் மீது 4 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Next Story