காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமானது..!
தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
சென்னை,
தெற்கு வங்க கடலின் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கடற்கரை மற்றும் இலங்கை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இதனால், இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடைஇடையே மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. தற்போது நாகப்பட்டினத்தில் இருந்து 760 கீ.மீட்டர் தூரத்திலும், சென்னையில் இருந்து 950 கீ.மீ தூரத்திலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அது இலங்கை கடற்பகுதியை அடுத்த 24 மணி நேரத்தில் வந்தடையும் என்றும் தொடர்ந்து தமிழ்நாடு கடல் பகுதிக்கு அருகாமையில் வரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story