நரிக்குறவர் தம்பதி லாரி மோதி பலி; 3 குழந்தைகள் உயிர் தப்பினர்

கடவூர் அருகே நரிக்குறவர் தம்பதி லாரி மோதி பலியானார்கள். மேலும், அவர்களுடைய 3 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தரகம்பட்டி,
நரிக்குறவர்
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா ரெங்கம்மாசத்திரம் நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 30). இவரது மனைவி சிந்தாமணி (28). இவர்களுக்கு சிந்து (10), ஜெயராஜ் (6), ஜென்சி (2) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். ஜேசுதாஸ் மரக்கட்டையால் செய்யப்பட்ட மூன்று சக்கர வாகனத்தில் தனது குடும்பத்துடன் கிராம பகுதிகளுக்கு சென்று ஊசி, பாசி மற்றும் பிளாஸ்டிக் விளையாட்டு பொருட்களை விற்பனை செய்து வருவது வழக்கம்.
இந்தநிலையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வீரப்பூர் கோவில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு ஜேசுதாஸ் தனது குடும்பத்தினருடன் அங்கு சென்று வியாபாரம் செய்தார். பின்னர் நேற்று காலை திண்டுக்கல் மாவட்டம் தென்னாம்பட்டியில் வியாபாரம் செய்து வரும் தனது அண்ணன் அருளை (32) பார்ப்பதற்காக பாலவிடுதி-அய்யலூர் சாலையில் மூன்று சக்கர வாகனத்தில் தனது குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தார்.
கணவன்-மனைவி பலி
இந்தநிலையில் கரூர் மாவட்டம் கடவூர் அருகே செவாப்பூர் ரெத்தினகிரி காடு அருகே சென்று கொண்டு இருந்தபோது திண்டுக்கல்லில் இருந்து தரகம்பட்டிக்கு சரக்கு ஏற்றி சென்ற லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக ஜேசுதாஸ் ஓட்டி சென்ற மூன்று சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், அந்த மூன்று சக்கர வாகனம் அப்பளம்போல் நொறுங்கியது. இதனால் பீதியடைந்த டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார்.இந்த விபத்தில், படுகாயம் அடைந்த ஜேசுதாஸ், அவரது மனைவி சிந்தாமணி ஆகியோர் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். விபத்தில், 3 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சிறுமி சிந்துவுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
டிரைவருக்கு வலைவீச்சு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பாலவிடுதி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் பலியான கணவன்-மனைவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய டிரைவரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story