விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1.17 லட்சம் மோசடி - மர்ம நபருக்கு வலைவீச்சு


விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1.17 லட்சம் மோசடி - மர்ம நபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 March 2022 12:01 PM IST (Updated: 28 March 2022 12:01 PM IST)
t-max-icont-min-icon

விவசாயியிடம் நூதன முறையில் ரூ.1.17 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நெல்லை, 

நெல்லை மாவட்டம், மானூர் அருகே உள்ள களக்குடி பகுதியை சேர்ந்தவர் துரை (வயது 37) விவசாயி. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இவரது செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் மறுமுனையில் பேசிய மர்ம நபர் தான் ஒரு குறிப்பிட்ட வங்கியில் இருந்து பேசுவதாகவும் உங்கள் வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டி உள்ளது. எனவே நாங்கள் உங்கள் செல்போன் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்புகிறோம். அதனை கிளிக் செய்யும்படியும் கூறி உள்ளார்.

இதனை உண்மை என்று நம்பிய துரை அவரது எண்ணுக்கு வந்த லிங்கை கிளிக் செய்துள்ளார். அப்போது அவரது வங்கி கணக்கில் இருந்து 3 தவனைகளாக மொத்தம் ரூ.1 லட்சத்து 17 ஆயிரத்து 750 எடுக்கப்பட்டு உள்ளதாக குறுந்தகவல் வந்தது. 

இதில் அதிர்ச்சி அடைந்த துரை அந்த மர்ம நபரின் எண்ணுக்கு போன் செய்தார். ஆனால் அந்த நபரை தொடர்பு கொள்ள இயலவில்லை. அப்போதுதான் துரைக்கு தான் நூதன முறையில் மோசடி செய்யப்பட்டது தெரிய வந்தது. உடனே அவர் இதுகுறித்து நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபரை வலைவீசி தேடிவருகிறார்கள்.

Next Story