புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரிப்பு எம் எல் ஏ க்கள் வேதனை

புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எம்.எல்.ஏ.க்கள் வேதனை தெரிவித்தனர்.
புதுச்சேரி
புதுச்சேரியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாக எம்.எல்.ஏ.க்கள் வேதனை தெரிவித்தனர்.
புதுவை சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் பேசியதாவது:-
கஞ்சா புழக்கம்
லட்சுமிகாந்தன் (என்.ஆர்.காங்): புதுவையில் கடந்த கால ஆட்சியில் எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்கள். இப்போது சாலைகள் போடப்படுகிறது. எனது தொகுதியில் மட்டும் ரூ.14 கோடியில் சாலைப்பணிகள் நடக்கிறது. காவலர் தேர்வு எந்தவித விமர்சனத்துக்கும் உள்ளாகாமல் நடத்தப்பட்டுள்ளது. இன்னும் காலியாக உள்ள அரசு பணியிடங்களை இளைஞர்களுக்கு வழங்கவேண்டும். இப்போது கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது.
பாஸ்கர் (என்.ஆர்.காங்) : புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு சிறப்பாக செயல்படுகிறது. தற்போது காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. கஞ்சா புழக்கம் சற்று அதிகரித்துள்ளது. வேலைவாய்ப்பு சரிவர இல்லாததால் இளைஞர்கள் கஞ்சா, மது பழக்கத்துக்கு அடிமையாகி வருகிறார்கள்.
ஆயிகுளம்
ரமேஷ் பரம்பத் (காங்) : மாகியில் 5 மாதம் மழையும், 5 மாதம் வெயிலும் அடிக்கும். இப்போது தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.1.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலைகள் நடக்கவில்லை. மழைக்காலத்துக்கு முன்பாக சாலைகளை அமைக்கவேண்டும். சாலைகளில் மின்விளக்கு வசதியில்லை. அதை சரிசெய்து தரவேண்டும்.
ஏ.கே.டி.ஆறுமுகம் (என்.ஆர்.காங்): எனது தொகுதியில் உள்ள 12 பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை உள்ளது. தனியார் பள்ளிகளில் ரூ.10 ஆயிரம் சம்பளத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அதேபோல் அரசுப்பள்ளியிலும் தற்காலிகமாக நியமித்து பற்றாக்குறையை போக்கிட வேண்டும். முத்திரையர்பாளையம் போன்ற பகுதிகளில் தேரோட்டம் நடக்கும்போது மின்சார வயர்கள் அறுந்துவிடுகின்றன. அதை தவிர்க்க மின்சார கேபிள்களை பூமியில் பதிக்கவேண்டும்.
ஆயி குளத்தை சுத்தம் செய்து சுற்றுலா தலமாக மாற்றவேண்டும். தற்போது கஞ்சா புழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க காவல்துறையில் சூப்பிரண்டு தலைமையில் தனிக்குழு உருவாக்க வேண்டும். நமது முதல்-அமைச்சர் ரங்கசாமி மக்களுக்காக 16 மணிநேரம் உழைக்கிறார். எந்த விஷயத்தையும் அவர் சமாளித்து வருகிறார். புதுவை மக்களின் மனநிலை அறிந்து அவர் செயல்படுகிறார்.
எதுவும் நடக்கவில்லை
அனிபால் கென்னடி (தி.மு.க.) : மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. புதுவை அரசு கூடுதல் நிதி கேட்டும் மத்திய அரசு தரவில்லை. பா.ஜ.க. எதையும் செய்யவிடாமல் தடுக்கிறது. கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது அடுத்தமுறை எதிர்க்கட்சிகள் கேள்வி கேட்க எதுவும் இருக்காது என்று அமைச்சர் நமச்சிவாயம் கூறினார். ஆனால் இப்போது அப்படி எதுவும் நடக்கவில்லை.
எந்த துறையிலும் நிதியில்லை. நாங்கள் எம்.பி. நிதி மூலம் சில பணிகளை செய்கிறோம். முதல்-அமைச்சரை பா.ஜ.க. செயல்படவிடவில்லை. டெல்லியிடமிருந்து புதுச்சேரி மக்களை காப்பாற்றுங்கள்.
சம்பத் (தி.மு.க.) : புதுச்சேரி தற்கொலையில் முதலிடத்தில் உள்ளது. காரணம் வேலைவாய்ப்பின்மைதான். மின்துறையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டால் தனியார் மயமாகிவிட்டது என்கிறார்கள். அதன் நிலைதான் என்ன?
பெட்ரோல், டீசல் விலை கடந்த 10 நாட்களில் ரூ.6 ஏறிவிட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் எந்த அளவில் நடக்கிறது? அதற்கான நிதிகள் திருப்பிவிடப்படும் நிலையில் உள்ளது. பள்ளிக்கூடங்களில் போதிய இடவசதி இல்லாத நிலையும் நிலவுகிறது.
மழைநீர் சேகரிப்பு திட்டம்
ஜான்குமார் (பா.ஜ.க.): எனது தொகுதியில் சாக்கடை வாய்க்கால் பிரச்சினை உள்ளது. லாஸ்பேட்டையில் இருந்து வரும் தண்ணீரால் கிருஷ்ணாநகர், ரெயின்போ நகர் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அதனை கொக்கு பார்க் வழியாக திருப்பிவிட வேண்டும். இதற்காக நான் தொகுதி மக்களிடம் ஏதேதோ வாக்குறுதி கொடுத்துவிட்டேன். அதேநேரத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும். மின்சாரம் தடையின்றி கிடைக்க ஒரேவழி சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதுதான். மாணவர்களிடையே கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. அதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் பேசினார்.
Related Tags :
Next Story