பெருமாள் கோவில்களில் ராம நவமி உற்சவம்

புதுச்சேரி பெருமாள் கோவில்களில் ராம நவமி உற்சவம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
புதுச்சேரி பெருமாள் கோவில்களில் ராம நவமி உற்சவம் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
ராம நவமி
புராண நம்பிக்கையின் படி, மகா விஷ்ணு ராம அவதாரம் எடுத்த நாள் ராம நவமியாகக் கொண்டாடப்படுகிறது. சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரக்கூடிய நவமி திதியில் ஸ்ரீ ராமன் அவதரித்தார். சில இடங்களில் சித்திரை வளர்பிறை தொடங்கி நவமி திதி வரை சித்திரை நவராத்திரியாகக் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரை மாதத்திற்குப் பதிலாக சற்று முன்னதாகவே பங்குனி 27-ம் தேதி (ஏப்ரல் 10) நவமி திதியில் ராம நவமி கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது. புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில்களில் ராமநவமி உற்சவம் நாளை மறுநாள் நடக்கிறது.
சிறப்பு அபிஷேகம்
புதுவை காந்திவீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா நகர் லட்சுமி ஹயக்ரீவர் கோவில், தென்கலை சீனிவாச பெருமாள் கோவில், எம்.எஸ்.அக்ரகாரம் வீர ஆஞ்சநேயர் கோதண்டராமர் கோவில், திலாஸ்பேட்டை சீனிவாச பெருமாள் கோவில், மகாவீர் நகர் பெருமாள் கோவில் உள்ளிட்ட புதுவையில் உள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சங்கர வித்யாலயா மேல்நிலைப்பள்ளியிலும் ராமநவமி உற்சவம் நடைபெற உள்ளது.
இதையொட்டி நாளை மறுநாள் காலை விஷேச திருமஞ்சனமும், மாலையில் சிறப்பு அபிஷேகமும், இரவில் பெருமாள் புறப்பாடு மற்றும் சாற்றுமுறை நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.
சாய்பாபா கோவில்
பிள்ளைச்சாவடி அரசு என்ஜினீயரிங் கல்லூரி எதிரே உள்ள கமல சாய்பாபா கோவிலில் ராமநவமியையொட்டி நாளை மறுநாள் காலை 8.30 மணிக்கு சிறப்பு அபிஷேகமும், 9 மணிக்கு வீணை கச்சேரியும், மதியம் 12 மணிக்கு ஆரத்தி மற்றும் அன்னதானமும் நடக்கிறது. தொடர்ந்து பகல் 2 மணிக்கு ராம சங்கீர்த்தனம், மாலை 4 மணிக்கு ராம நவமி கொடி ஊர்வலம், தொட்டில் பூஜை, மாலை 6 மணிக்கு ஆரத்தியும், 6.30 மணிக்கு குழந்தை ராமரை தொட்டிலிடுதல் நிகழ்ச்சியும், 6.45 மணிக்கு சாயி பஜனையும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story