ஆசிரியர்களை தாக்கக்கூடாது மாணவர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை


ஆசிரியர்களை தாக்கக்கூடாது மாணவர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை
x
தினத்தந்தி 26 April 2022 7:03 PM GMT (Updated: 26 April 2022 7:03 PM GMT)

ஆசிரியர்களை தாக்கக்கூடாது என்று மாணவர்களுக்கு டி.ஜி.பி. சைலேந்திர பாபு அறிவுரை கூறியுள்ளார்.

சென்னை,

நான் இரண்டு காணொலி சம்பவங்களை பார்த்தேன். ஒரு சம்பவத்தில் மாணவர்கள் ஆசிரியர் ஒருவரை தாக்க முற்படுகிறார்கள். இன்னொரு சம்பவத்தில் பள்ளி வகுப்பறையில் உள்ள மேஜை, நாற்காலி போன்ற பொருட்களை கஷ்டப்பட்டு உடைக்கிறார்கள். இந்த இரண்டு சம்பவங்களையும் பார்த்து பாரதியார் சொன்னபடி நெஞ்சு பொறுக்காத சூழ்நிலையில் இந்த பதிவை நான் வெளியிட்டு உள்ளேன். இந்த இரண்டு சம்பவங்களும் அரசு பள்ளியில்தான் நடந்துள்ளன.

நானும் அரசு பள்ளியில்தான் படித்தேன். ஆனால் அரசு பள்ளியில் தரையில் உட்கார்ந்துதான் படித்தேன். உங்களுக்காவது அரசு நீங்கள் உட்காருவதற்கு பெஞ்சு, நாற்காலி வாங்கி போட்டுள்ளது. உங்களது பெற்றோர், உங்களை அரசு பள்ளியில் ஏன் படிக்கவைத்தார்கள். உங்கள் பெற்றோருக்கு சொத்து இல்லை. வருமானம் இல்லை. அதற்காக உங்களுக்கு சொத்து இல்லை என்று நினைக்காதீர்கள்.

ஆசிரியர்கள்தான் சொத்து

நீங்கள் படிக்கும் பள்ளிக்கூடம்தான் உங்களது சொத்து, நீங்கள் விளையாடும் மைதானம்தான் உங்கள் சொத்து. நீங்கள் உட்காரும் பெஞ்சு, நாற்காலிதான் உங்களது சொத்துகள். உங்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களும் உங்களது சொத்துகள்தான். ஏனென்றால், ஆசிரியர்கள்தான் உங்களுக்கு கணிதம் சொல்லிக்கொடுக்கிறார்கள். அறிவியல், புவியியல், கம்ப்யூட்டர் கற்றுத்தருகிறார்கள். விளையாட்டு சொல்லித்தருகிறார்கள். உங்களுக்கு நல்ல வழிகாட்டுகிறார்கள். அவர்கள்தான் உங்களது ஆதாரம். அவர்களை தாக்குவது, நாம் வாழும் வீட்டை கொளுத்துவதற்கு சமம். நமது கை-கால்களை நாமே வெட்டிப்போடுவது போன்றது.

ஆசிரியர்களை தாக்குவது சட்டப்படி குற்றம். அதில் சட்டம் சில பாதுகாப்பு கொடுத்திருந்தாலும், ஆசிரியர்களை தாக்குவது கூடாது, அது தவறு. பள்ளிகூடம்தான் நாம் நம்மை வளர்த்துக்கொள்ளும் இடம். அங்கு ஏன் மாணவர்கள் இதுபோல் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. இதுபோன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story