லாரி மோதி தொழிலாளி உடல் நசுங்கி பலி

தட்டாஞ்சாவடியில் லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக தொழிலாளி பலியானார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தட்டாஞ்சாவடியில் லாரி மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக தொழிலாளி பலியானார். பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தொழிலாளி பலி
திண்டிவனம் தாலுகா மேல் ஒலக்கூர் பசுமலை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 52). மொரட்டாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள மாட்டு பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இன்று காலை அவர், மாட்டு பண்ணையில் இருந்து புதுவைக்கு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
புதுவை-திண்டிவனம் சாலையில் தட்டாஞ்சாவடி கஸ்தூரிபாய் நகர் சந்திப்பு அருகே வந்தபோது, பின்னால் கிரானைட் கற்கள் ஏற்றி வந்த லாரி எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணி லாரியின் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சாலை மறியல்
இதனால் பயந்து போன டிரைவர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்தவுடன் புதுவை வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்தநிலையில் புதுவை-திண்டிவனம் சாலையில் அரசு, தனியார் பஸ்கள், கார்கள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த மாதம் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்கும் போது கார் மோதி இறந்தார். தற்போது லாரி மோதி தொழிலாளி இறந்துள்ளார் என்று குற்றஞ்சாட்டிய அப்பகுதி மக்கள் புதுவை-திண்டிவனம் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், வடக்கு பகுதி போக்குவரத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்க விபத்தை தடுக்க அப்பகுதியில் உடனடியாக பேரிகார்டுகள் வைக்கப்பட்டன.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story