9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் வெப்பநிலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் கத்திரி வெயில் காலத்திலும் இயங்கும்; மே 13-ந் தேதி வரை பள்ளி இறுதி தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. பொதுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் தவிர மற்ற வகுப்புகளுக்கும் கொளுத்தும் வெயிலில் பள்ளிகளை நடத்துவது மனித உரிமை மீறல் ஆகும்.
கொரோனா வைரஸ் பரவலால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது உண்மை தான். ஆனால், அதையே காரணம் காட்டி குழந்தைகள் பயிலும் வகுப்புகளுக்குக்கூட மே 13-ந் தேதி வரை வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனரகம் பிடிவாதம் பிடிப்பது எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும்.
கொரோனா 4-வது அலை, கொளுத்தும் கோடை வெயில் ஆகிய இரட்டை ஆபத்துகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை. சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு மே 2-ந் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்க இருக்கிறது. அதேபோல், மாணவர்கள் நலன் கருதி 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை அளிக்க வேண்டும். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். அதேபோல், கல்லூரிகளுக்கும் குறைந்தபட்சம் சனி, ஞாயிற்றுக்கிழமைகள் விடுமுறை அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story