பள்ளிக்கு சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்...!


பள்ளிக்கு சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி உயிரிழப்பு - உறவினர்கள் சாலை மறியல்...!
x
தினத்தந்தி 2 May 2022 1:57 PM IST (Updated: 2 May 2022 1:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த சிறுவனின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.

சென்னை, 

சென்னை மணலி எம்எம்டிஏ முதல் பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன் வேலை செய்து வருகிறார். இவரது மகன் எழிலரசன் (10). அதே பகுதி 3-வது பிரதான சாலையில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 28-ம் தேதி பிற்பகல் எழிலரசன் சக மாணவர்களுடன் மாத்தூர் அடுத்த பாலசுப்பிரமணி நகரில் உள்ள குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து மாதவரம் பால் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். 

இந்நிலையில் சிறுவனின் உயிரிழப்புக்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் எனக் கூறி இன்று காலை சிறுவனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பள்ளியை முற்றுகையிட்டும் சாலை மறியலில் ஈடுபட்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சிறுவனின் உயிரிழப்புக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோஷம் எழுப்பினர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பள்ளி நிர்வாக அதிகாரிகள் சம்பவ இடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். 

இது குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என கூறியதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில்  பரபரப்பு ஏற்பட்டது.

Next Story