நீலகிரி: தடுப்பு சுவரில் மோதி கால்வாயில் இறங்கிய சுற்றுலா வேன்- 8 பேர் படுகாயம்...!

நீலகிரி அருகே சாலையோர தடுப்பு சுவரில் சுற்றுலா வேன் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
நீலகிரி,
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். சென்னை பூந்தமல்லியில் இருந்து நேற்று ஒரு வேனில் 13 பேர் ஊட்டிக்கு சுற்றுலா வந்தனர். தொடர்ந்து சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து விட்டு இரவில் தங்கினர்.
பின்னர் பைக்காரா, ஊசிமலை காட்சி முனை, கூடலூர் வழியாக முதுமலைக்கு செல்வதற்காக வேனில் வந்து கொண்டிருந்தனர். வேனை பூந்தமல்லி அருகே உள்ள திருமழிசை பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 30) என்பவர் ஓட்டினார். நேற்று பகல் 1 மணிக்கு கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது சாலையோரம் உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்கு உள்ளானது.
இதில் வேனின் முன்பக்க கண்ணாடி, டயர்கள் உடைந்து விழுந்தது. தொடர்ந்து டிரைவர் சுரேஷ் சுமார் 10 அடி தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் வேனில் அமர்ந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 7 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து வேனுக்குள் சிக்கி இருந்தவர்களை பாதுகாப்பாக மீட்டனர். தொடர்ந்து டிரைவர் உள்பட 8 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தகவலறிந்த கூடலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூ ராஜன், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story